ஒவ்வாத படங்கள் / காணொளிகளை இணையத்தில் பதிவேற்றும் குழந்தைகள்! எச்சரிக்கும் நோர்வே குற்றவியல் பிரிவு!!

You are currently viewing ஒவ்வாத படங்கள் / காணொளிகளை இணையத்தில் பதிவேற்றும் குழந்தைகள்! எச்சரிக்கும் நோர்வே குற்றவியல் பிரிவு!!

சமூகத்துக்கு ஒவ்வாத புகைப்படங்களையும், காணொளிகளையும் (அதாவது, பாலியல் சம்பந்தமான நிர்வாணநிலை புகைப்படங்கள் / காணொளிகள்) இணையங்களில் பதிவேற்றும் குழந்தைகளின் தொகை அதிகரித்து வருவதாக, நோர்வேயின் காவல்துறையின் குற்றத்தடுப்பு பிரிவான “Kripos” எச்சரிக்கை விடுத்துள்ளது.

“கிரிமினல்” குற்றங்கள் உள்ளிட்ட, ஏனைய குழுநிலை குற்றங்களை தடுக்கும் சர்வதேச பிரிவான, நோர்வேயின் “Kripos” அமைப்பின் சார்பாக பேசக்கூடிய “Helge Haugland” மேற்படி அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக 13 வயதுடைய குழந்தைகளும், தமது நிர்வாணப்படங்களையும், காணொளிகளையும் இணையத்தில் பகிர்ந்துவருவதோடு அதற்காக சன்மானமாக பணத்தினையும் பெற்றுக்கொள்வதாக வருத்தம் தெரிவிக்கும் அவர், மேற்படி குற்றச்செயல்கள் தொடர்பிலான தனது 20 வருடங்கள் துறைசார் அனுபவத்தில், வயதில் குறைந்த 13 வயதேயான குழந்தைகள் பணத்துக்காக இவ்வாறான அனுமதிக்க முடியாத செயல்களில் ஈடுபடுவது சமீபகாலங்களில் அதிகரித்துள்ளதை காண முடிகிறது எனவும் கவலை தெரிவிக்கிறார்.

கூடியளவு சம்பந்தப்பட்ட குழந்தைகள் தங்களைத்தாங்களே நிர்வாண புகைப்படம் எடுத்துக்கொள்வதோடு, காணொளிகளை எடுத்துக்கொள்வதாகவும், 13 – 16 வயதுக்கிடைப்பட்ட குழந்தைகள் “பாலியல் பலாத்காரம்” என்ற வகையறைக்குள் உள்ளடக்கப்படக்கூடிய காணொளிகளை தாங்களே தயாரித்து சுயவிருப்பின் பேரிலேயே இணையத்தில் பணத்துக்காக விற்பனை செய்வதாக தெரிவிக்கும் “Kripos”, தற்போது அதிகரித்த பாவனையில் இருக்கும் “Snapchat” ஊடாக இந்த வியாபாரம் கொடிகட்டிப்பறப்பதாகவும் தெரிவிக்கிறது.

தற்போதுள்ள தொழிநுட்ப வளர்ச்சியில், விற்பனைக்கான பணப்பரிவர்த்தனை ஒருசில வினாடிகளிலேயே முடிந்துவிடும் நிலை இருப்பதால், இவ்வாறான ஒவ்வாத படங்கள் / காணொளிகளுக்காக அலைந்து திரிபவர்கள் மிக இலகுவில் குழந்தைகளை பணத்தாசை காட்டி மயக்கி விடுவதாலும், உடனடியாகவே கைகளில் பணம் கிடைத்து விடுவதாலும் குழந்தைகளும் இலகுவில் இவ்வாறானவர்களுக்கு இரையாகி விடுவதாகவும் “Kripos” கவலை தெரிவிக்கிறது.

குழந்தைகளை தூண்டி இவ்வாறான படங்களையும், காணொளிகளையும் பெற்றுக்கொள்பவர்கள் பெரும்பாலும், பாலியல் குற்றச்செயல்களுக்காக முன்னதாகவே தண்டிக்கப்பட்டவர்களாக இருப்பதாகவும் தெரிவிக்கும் “Kripos”, வெறும் பணத்தாசையினால் தங்களது நிர்வாண படங்கள் / காணொளிகளை இணையம் மூலம் இன்னொருவருக்கு கொடுக்கும்போது, அவை எவ்வளவு தூரம், எத்தனை பேருக்கு உலகெங்கும் பரவுகிறது போன்ற ஆபத்துக்களை அக்குழந்தைகள் அறியாதிருப்பதும், பின்னதாக, அக்குழந்தைகளிடம் படங்கள் / காணொளிகளை பெற்றவர்களே அக்குழந்தைகளோடு இணையமூலம் தொடர்பு கொண்டு மிரட்டி பலாத்காரம் செய்யும் நிலைக்கு அக்குழந்தைகள் முகம் கொடுக்க வேண்டியிருப்பதும், இவற்றுக்கு ஆட்படும் குழந்தைகள் வாழ்நாள் முழுவது உளவியல் பாதிப்புக்களுடனேயே காலங்கழிக்கும் நிலைமைகள் கொடுமையானவை எனவும் தெரிவிக்கிறது.

தொழிநுட்பம் உச்சத்திலிருக்கும் இக்காலகட்டத்தில், குழந்தைகளுக்கு கிடைக்கும் சமூகவலைத்தளங்களின் கட்டுப்பாடற்ற பாவனை, பதின்ம வயதில் இருக்கும் குழந்தைகளின் உடலில் ஏற்படக்கூடிய இயற்கையான மாற்றங்களும், பாலியல் உணர்வுகளும் கொடுக்கக்கூடிய “உணர்வு வடிகால்” களுக்கான தேடல்கள் மற்றும் எளிதில் கைகளுக்கு பணம் கிடைக்கும் வசதி போன்ற காரணிகள், குழந்தைகளை இவ்வாறான செயல்களுக்கு தூண்டுகின்றன என்றாலும், குழந்தைகள் தாம் செய்வது என்னவென அறியாமலும், பின்விளைவுகளை அறியாமலும் செய்வதால் அவர்களை குற்றம் சொல்ல முடியாதென கருத்து வெளியிடும் “Kripos”, எனினும், இவ்வாறான உள்ளடக்கங்களை கொண்ட படங்களையும், காணொளிகளை தெரிந்தே பெற்றுக்கொள்ளும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் குற்றவாளிகளாக கருதப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டுமெனவும் கூறுகிறது.

எனினும், இவ்வாறான இக்கட்டான நிலைமைகளுக்குள் மாட்டிக்கொண்டு, பலாத்காரத்துக்கும் உள்ளாகும் அத்தனைபேரும், தங்களுக்கு நடந்ததை முறையிடுவதில்லை எனவும் கவலை தெரிவிக்கும் “Kripos”, தாங்களாகவே விரும்பி தங்களது நிர்வாண படங்களையும், காணொளிகளையும் பகிர்ந்தால், அனைத்து பின்விளைவுகளும் தாங்களே பொறுப்பாளிகள் என்ற மனோநிலைக்கு குழந்தைகள் வந்து விடுவதாலும் பலர் தமக்கு நிகழ்ந்தவற்றை முறைப்பாடாக்க முன்வருவதில்லையென்றும் கூறுவதோடு, இந்நிலை மாறவேண்டும் எனவும், பாதிக்கப்படும் குழந்தைகளோ அல்லது பெற்றோர் பாதுகாவலர்களோ தயங்காமல் முறைப்பாடுகளை மேற்கொள்ளும் பட்சத்திலேயே குற்றவாளிகளை அடையாளம் காணமுடியுமெனவும் அறிவுறுத்தல் விடுத்திருக்கிறது.

இந்நிலையில், குழந்தைகளின் சமூகவலைத்தள பாவனை, மற்றும் அவர்களது நடவடிக்கைள் தொடர்பில் பெற்றோர் அதீத கவனம் கொள்ள வேண்டும் என்பதோடு, இணையவழி நடைபெறக்கூடிய இவ்வாறானா செயல்கள் தொடர்பான அறிவுரைகளை தகுந்த முறையில் குழந்தைகளுக்கு வழங்குவதோடு, விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதோடு, தங்களது குழந்தைகள் பாதிக்கப்படும் துரதிர்ஷ்டவசமான நிலைமைகள் வரும்போது இடிந்துபோய் இருந்துவிடாமல், குழந்தைகளுக்கு தேவையான உளவியல் உறுதித்தன்மையை வழங்குவதோடு, அவர்களுக்கு ஆதரவாகவும் இருப்பவேண்டும் என்பது முக்கியமானது. அதேவேளை, சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் தயங்காமல் எடுப்பதன் மூலம், ஏனைய பல குழந்தைகளும் இவ்வாறு பாதிக்கப்படுவதை தடுப்பதற்கும் உதவ முடியும் என்பதையும் நினைவில் வைத்திருப்பது அவசியம்.

https://www.tv2.no/nyheter/13879999/

பகிர்ந்துகொள்ள