ஒஸ்லோவில் குழந்தைகளை குறிவைக்கும் இனந்தெரியாத நபர்கள்!

You are currently viewing ஒஸ்லோவில் குழந்தைகளை குறிவைக்கும் இனந்தெரியாத நபர்கள்!

நோர்வே தலைநகர் “Oslo” வில், பாடசாலை செல்லும் குழந்தைகளை கடத்தும் முயற்சிகள் தொடர்பான பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக “Oslo” நகர காவல்துறை தெரிவிக்கிறது.

தனிமையில் பாடசாலை செல்லும் குழந்தைகளை குறிவைக்கும் இனந்தெரியாத நபர்கள், குழந்தைகளுடன் நயமாக பேசியோ அல்லது, குழந்தைகளுக்கு பிடித்தமான இனிப்பு வகைகளை வழங்குவதாக கூறியோ தமது வாகனங்களுக்குள் குழந்தைகளை உள்ளீர்ப்பதற்கு முயன்றுள்ளதாக தெரிவிக்கும் காவல்துறை, இது விடயம் தொடர்பில் அனைவரும் அவதானமாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் உடனடியாக தம்மை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளும் காவல்துறை, குழந்தைகளுக்கு இது தொடர்பான விழிப்புணர்வையும் பெற்றோர் ஏற்படுத்த வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பெரியவர்களின் துணையில்லாமல் தனியாக பாடசாலை செல்லும் குழந்தைகள், வழியில் வழிமறிக்கும் இனந்தெரியாதவர்கள் தொடர்பில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென பெற்றோர்கள் தமது குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டுமென தெரிவிக்கும், இது விடயத்தில் அனுபவப்பட்ட பெற்றோர் சிலர், இவ்வாறான சந்தர்ப்பங்களில், உதவிகோரி கூக்குரலிடுவதற்கும், இனந்தெரியாத நபர்களிடமிருந்து தப்பித்துக்கொள்வதற்கும் குழந்தைகள் அறிவுறுத்தப்பட வேண்டும் என்பதோடு, இனந்தெரியாத நபர்கள் கொடுக்க முனையும் எந்தப்பொருளையும் ஏற்றுக்கொள்ளாமலும், உடனடியாக அவ்விடத்தைவிட்டு நகரும் படியும் குழந்தைகள் அறிவுறுத்தப்படவும் வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த வாரங்களில் அவதானிக்கப்பட்டுள்ள இவ்விரும்பதகாத நிலைமைகளின் காரணமாக, குழந்தைகள் பாடசாலை செல்லும் வழிகளில் பெற்றோர் கூட்டாக பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள