நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஓமன் நாட்டில் ஆட்சி செய்து வந்த சுல்தான் காபூஸ் பின் சையத் அல் சையத் காலமானார். அவருக்கு வயது 79. 1970-களில் அவரது தந்தை சயித் பின் தைமூரை ஆட்சியில் இருந்து கவிழ்த்துவிட்டு பதவிக்கு வந்த காபூஸ் பின் சையத் அல் சையத், எண்ணெய் வளமிக்க ஓமன் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் பெல்ஜியத்தில் சிகிச்சை பெற்று நாடு திரும்பினார்.
இந்நிலையில், நேற்று காபூஸ் உயிரிழந்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. திருமணம் செய்யாமல் வாழ்ந்த காபூஸ், அடுத்த சுல்தான் யார் என்பதையும் அறிவிக்கவில்லை.
இதனால் அந்நாட்டு வழக்கப்படி மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த 50 பேர் நாளைக்குள் கூடி புதிய சுல்தானை தேர்வு செய்வார்கள். சுல்தான் காபூஸ் பின் சையத் அல் சையத் மறைவையொட்டி மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அந்நாடு தெரிவித்துள்ளது.