ஓமான் வளைகுடாவில், கடும் புயலில் சிக்கி கவிழ்ந்த கப்பலில் இருந்த 21 இலங்கை பணியாளர்களை ஈரானிய அவசர சேவைகள் பிரிவு காப்பாற்றியுள்ளதாக ஈரானிய அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
குக் தீவுகளின் கொடியுடன் எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பல் தெற்கு நகரமான ஜாஸ்கில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் (30 மைல்) தொலைவில் கவிழ்ந்ததாக ஐஆர்என்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
‘ஒரு மீட்புக் கப்பல் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டது மற்றும் 21 பணியாளர்கள் காப்பாற்றப்பட்டனர்” என்று ஜாஸ்க் துறைமுகங்கள் மற்றும் கடல்சார் நிர்வாகத்தின் இயக்குனர் முகமது அமீன் அமானி தெரிவித்துள்ளார். மீட்கப்பட்டவர்களில் 5 பேர் மருத்துவ சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.