பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிராக போராட்டத்தில் களமிறங்கியவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை பொலிஸார் வீசியுள்ளனர். பிரான்ஸில் வாக்கெடுப்பின்றி ஓய்வு பெறும் வயதை 62லிருந்து 64 ஆக உயர்த்துவதற்கு அரசாங்கம் முடிவெடித்ததை தொடர்ந்து, மசோதாவுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து சுமார் 7000 க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் களமிறங்கினர்.
பாரிஸில் உள்ள கான்கார்ட் சதுக்கத்திற்கு அருகே குப்பை குவியல்கள் மற்றும் பலகைகளை ஆர்பாட்டகாரர்கள் தீ வைத்து எரித்தனர்.
இதனால் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர், மேலும் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க தண்ணீர் பீரங்கி சுடப்பட்டது.
அப்போது பொலிஸாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பொலிஸ் அதிகாரி ஒருவர் படுகாயமடைந்தார்.
இந்நிலையில் சர்ச்சைக்குரிய ஓய்வூதிய மசோதாவுக்கு எதிராக போராட்டத்தில் களமிறங்கிய பொதுமக்களில் 120 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதற்கிடையில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இந்த நடவடிக்கை ஜனநாயகத்திற்கு எதிரானது என்று வாதிட்டனர்.
ஆனால் நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கான சாத்தியக்கூறுகள் அதிகாரம் இன்னும் இறுதியில் சட்டமன்றத்தில் உள்ளது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.