தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் காவல்த்துறையினர் கைது செய்யப்பட்மை குறித்து தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக் கட்சி பாராளுமன்றக் குழு கரிசனை வெளியிட்டுள்ளது.
இது குறித்த கரிசனையை இலங்கையிடம் வெளிப்படுத்துமாறு பிரிட்டன் வெளிறவுச் செயலாளரை அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழு வலியுறுத்தியுள்ளது.
இந்திய அரசு தமிழ் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்த திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியதற்காக பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கைது செய்யப்பட்டார்.
எந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படாது, பிடியாணை இன்றி இந்தக் கைது இடம்பெற்றது.
இலங்கை காவல்த்துறையினர் கொடூரங்களின் மற்றொரு உதாரணமாக இது அமைந்துள்ளது. இலங்கை காவல்த்துறையினர் தொடர்ச்சியான முறைகேடுகள், தன்னிச்சையான தடுப்புக்காவல், சித்திரவதை மற்றும் சட்டத்திற்கு புறம்பான கொலைகள் குறித்த மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையில் குறிப்பிட்ட விடயங்களையும் இது உறுதி செய்கிறது.
நினைவுகூரும் தமிழ் மக்களின் உரிமைக்கு எதிரான அடக்குமுறை குறித்த ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை மேலும் உறுதி செய்யும் வகையில் இக்கைது அமைந்துள்ளது.
இலங்கையில் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் அமைதியை நிலைநாட்ட எந்தவொரு முயற்சியிலும் அரசு ஈடுபடவில்லை என்பதை இச்சம்பவம் வெளிப்படுத்துகிறது என இது குறித்து கருத்துத் தெரிவித்த தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக் கட்சி பாராளுமன்றக் குழு தலைவரான எலியட் கோல்பர்ன் கூறினார்.