மே 5-ஆம் திகதி முதல் நேற்று வரையான 8 நாட்களில் மட்டும் இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 148 பேர் உயிரிழந்துள்ளனர். மே -5 ஆம் திகதி 14 பேர், 6-ஆம் திகதி – 11 பேர், 7-ஆம் திகதி -19 பேர், 8-ஆம் திகதி -22 பேர் 9-ஆம் திகதி 15 பேர் உயிரிழந்தனர். மே 10-ஆம் திகதி இலங்கையில் ஒரு நாள் அதிகூடிய அளவாக 26 கொரோனா உயிரிழப்புக்கள் அறிவிக்கப்பட்டன. மே-11 ஆம் திகதி 23 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். அத்துடன், நேற்று 18 பேர் கொரோனாவால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 8 நாட்களில் மட்டும் 148 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
இவற்றுடன் நாட்டில் பதிவாக மொத்த கொரோனா மரணங்கள் 868-ஆக அதிகரித்துள்ளன.
நாட்டில் தினசரி தொற்று நோயாளர்களும் சராசரி 2,500 என்ற அடிப்படையில் நாட்டில் பதிவாகி வருகின்றனர். அத்துடன், மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவுகள், தனிமைப்படுத்தல் விடுதிகள், சிகிச்சை மையங்கள் முற்றாக நிரம்பியுள்ளன. இதனால் அடுத்து வரும் வாரங்களில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று நோய் நெருக்கடி கட்டுப்பாடின்றி தற்போதைய நிலையில் தொடருமானால் ஜூன் மாதமளவில் தினசரி உயிரிழப்புக்கள் 264 வரை அதிகரிக்கலாம் என வொஷிங்டன் பல்கலைகழகத்தை சேர்ந்த சுயாதீன ஆராய்ச்சி அமைப்பான ஐ.எச்.எம்.மி. (IHME) தனது உத்தேச கணிப்பீட்டில் தெரிவித்துள்ளது. அத்துடன், இதே நிலை தொடர்ந்தால் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துக்குள் 20,000 உயிரிழப்புகள் ஏற்படக்கூடுமெனவும் அதன் உத்தேச கணிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.