கடன் மறுசீரமைப்பு இணக்கப்பாட்டை எட்ட இலங்கைக்கு சீனா பெரிதும் உதவியது!

You are currently viewing கடன் மறுசீரமைப்பு இணக்கப்பாட்டை எட்ட இலங்கைக்கு சீனா பெரிதும் உதவியது!

இலங்கை விவகாரத்தில் கடன் மறுசீரமைப்பு இணக்கப்பாட்டை எட்டுவதற்கு சீனா பெரிதும் உதவியதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சாம்பியா, கானா மற்றும் எத்தியோப்பியா போன்ற நாடுகளுடன் கடன்மறுசீரமைப்பு தொடர்பான இணக்கப்பாட்டை அடைந்துகொள்வதை முன்னிறுத்திய நடவடிக்கைகளை சீனா துரிதப்படுத்தவேண்டுமென சீன பொருளாதாரத்துறை உயர்மட்ட அதிகாரி லி கியாங்கிடம் கேட்டுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா கடந்த மாதம் சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது அவர் லி கியாங் உள்ளடங்கலாக சீனாவின் உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தார். இதுபற்றி கருத்து வெளியிடுகையிலேயே கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் பிரஸ்தாபித்துள்ளார்.

மேலும் லி கியாங் இலகுவில் அணுகக்கூடிய மனிதராக இருப்பதாகத் தெரிவித்துள்ள சர்வதேச நாணய நிதியப் பணிப்பாளர், பல்வேறு நாடுகளினதும் கடன் மறுசீரமைப்பு விவகாரங்களுக்கு சுமுகமாகத் தீர்வு காண்பதில் சீனா முக்கிய பங்காற்றவேண்டும் என்று தான் விரும்புவதாக லி கியாங் தன்னிடம் கூறியதாகவும் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார்.

அத்தோடு ‘பல்வேறு நாடுகளினதும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் உரியவாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பல்வேறு கட்டமைப்புக்கள் சீனாவில் உள்ளன.

அதுவே கடன் மறுசீரமைப்புச் செயன்முறையை உள்ளக ரீதியில் கடினமானதாக்குகின்றது. இருப்பினும் இவ்விவகாரத்தில் சீனா அதன் பங்களிப்பைத் துரிதப்படுத்தவேண்டியது அவசியமாகும்’ என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக ஜி-20 நாடுகளின் பொதுவான செயற்திட்டத்தின்கீழ் உதவியை நாடுவதற்குத் தகுதிபெறாத நடுத்தர வருமானம்பெறும் நாடான இலங்கை கடன் மறுசீரமைப்பு தொடர்பான இணக்கப்பாட்டை எட்டுவதற்கு சீனா உதவியதாகவும், இதனைப்போன்று ஏனைய நாடுகளின் விவகாரங்களிலும் சீனா முன்னேற்றத்தைக் காண்பிக்க வேண்டும் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply