பிறழ்வடைந்த “கொரோனா” வைரசின் அதீதமான பரவலால், நோர்வே தலைநகர் “Oslo” உள்ளிட்ட சில இடங்களில் மிகக்கடுமையான விதிகள் இன்று, 23.01.2021 நண்பகல் 12:00 மணி முதல் அமுல் படுத்தப்படுகின்றன.
31.01.2021 வரை அமுலில் இருக்கக்கூடிய வகையில், “Oslo”, “Enebakk”, “Ås”, “Vestby”, “Nesodden”, “Indre Østfold”, “Våler” மற்றும் “Nordre Follo” ஆகிய இடங்களில் இவ்விதிகள் அமுலுக்கு வருகின்றன.
- இறுதிச்சடங்குகள் தவிர, பொது இடங்களில் மக்கள் கூடும் அனைத்து நிகழ்வுகளும் தடை செய்யப்படுகின்றன!
- அத்தியாவசிய பாவனைப்பொருட்களை விற்பனை செய்யும் அங்காடிகள், மருந்தகங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தவிர்ந்த ஏனைய வர்த்தகநிலையங்கள் அனைத்தும் மூடப்படும்!
- அனைத்து விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகள் நிறுத்தப்படும்!
- உணவகங்கள் (உணவை முன்பதிவு செய்து எடுத்துச்செல்ல அனுமதியுண்டு), உடற்பயிற்சி நிலையங்கள், நீச்சல் தடாகங்கள், நூலகங்கள், பொழுதுபோக்ககங்கள், நூதனசாலைகள், திரையரங்கங்கள் உள்ளிட்ட, பொதுமக்கள் கூடும் இடங்கள் மூடப்படும்!
- குழந்தைகள் காப்பகங்கள், இளநிலை பாடசாலைகள் சிவப்பு அபாய நிலையில் வைத்திருக்கப்படும்!
- மேனிலை / உயர்நிலைப்பள்ளிகள், பல்கலைக்கழகங்களில் இலத்திரனியல் கற்பித்தல் முறை பின்பற்றப்படும்!
- நண்பர்கள், உறவினர் வீடுகளுக்கு அநாவசியமாக செல்வது தவிர்க்கப்பட வேண்டும்!
- பொதுப்போக்குவரத்து 50 சதவிகிதமாக மட்டுப்படுத்தப்படும்!
- முகக்கவசம் அணிவது கட்டாயம்!
- நலிந்த உடல் நிலையை கொண்டோர் / குறைவான நோயெதிர்ப்பு சக்தியை கொண்டோர் கூடுமானவரை தனிமையில் இருக்க வேண்டும்!
உள்ளிட்ட விதிகள் இன்றிலிருந்து அமுலாகின்றன.
இவை தவிரவும், ஏற்கெனவே அமுலில் இருக்கும் விதிமுறைகளும் மறு அறிவித்தல் வரை நடைமுறையிலிருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.