எண்ணெய் வருமானத்தில் கொடிகட்டிப்பறக்கும் நாடுகளின் வரிசையில் இடம்பிடித்திருக்கும் நோர்வே, கட்டார் நாட்டில் தனது முதலீடுகளை அதிகரித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு முடிவில் சுமார் 735 மில்லியன் நோர்வே குறோணர்களாக இருந்த முதலீடுகள், 2020 முடிவில் சுமார் 5 பில்லியன் குறோணர்களை எட்டியுள்ளதாகவும், ஒரு வருட காலத்தில் நோர்வேயின் கட்டார் முதலீடுகள் 7 மடங்காக அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கட்டார் நாட்டில் நடைபெறவிருக்கும் உலககிண்ணத்துக்கான உதைபந்தாட்டப்போட்டிகளின் பூர்வாங்க ஏற்பாடுகளில் பயன்படுத்தப்படும் கூலித்தொழிலார்கள் பலர் பணியின்போது மரணித்திருப்பதாகவும், மனிதவுரிமைகள் அங்கு பின்பற்றப்படுவதில்லையெனவும் குற்றம் சாட்டும் நோர்வே, மறுபுறத்தில் கட்டாரில் தனது பொருளாதார முதலீடுகளை, அதுவும், நடக்கவிருக்கும் உதைபந்தாட்டப்போட்டிகளின் ஏற்பாடுகளிலும் தனது முதலீடுகளை அதிகரித்திருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
கட்டாரில் உலகக்கிண்ணத்துக்கான உதைபந்தாட்ட போட்டிகளை நடத்துவது என 2010 ஆம் ஆண்டில் முடிவு எட்டப்பட்டதிலும் முறைகேடுகள் நிறைந்திருப்பதாக 2011 ஆம் ஆண்டில் தகவல்கள் வெளிவந்திருந்த நிலையில், இந்த முடிவு எட்டப்பட்ட நாளிலிருந்து, உதைபந்தாட்ட போட்டிகளுக்காக கட்டாரில் மேற்கொள்ளப்பட்டுவரும் பூர்வாங்க ஏற்பாட்டு பணிகளின்போது மாத்திரம் இதுவரை 6500 தொழிலாளர்கள் பணியின்போது மரணித்துள்ளதாக, பிரித்தானிய ஊடகமான “The Guardian” தெரிவித்திருந்ததோடு, சுமார் 75 கட்டடப்பணியாளர்கள், உதைபந்தாட்ட மைதான கட்டுமானப்பணிகளின்போது மரணமடைந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கட்டடப்பணியாளர்களின் பணியின்போதான பாதுகாப்பு தொடர்பில் கட்டார் அரசு கவனமேதும் எடுப்பதில்லையெனவும், மனிதவுரிமை தொடர்பில், குறிப்பாக தன்னினச்சேர்க்கையாளர்கள் தொடர்பில் நியாயமான வழிமுறைகளை கட்டார் பின்பற்றவில்லையெனவும் தொடர்ச்சியாக குற்றம் சாட்டிவரும் நோர்வே, தனது நிலைப்பாட்டுக்கெதிரான வகையில் கட்டாரில் பொருளாதார முதலீடுகளை அதிகரித்து வருவது விசனங்களை ஏற்படுத்தியுள்ளது.