“கட்டார்” உலக உதைபந்தாட்ட போட்டிகளை புறக்கணிக்க கோரிக்கை!

You are currently viewing “கட்டார்” உலக உதைபந்தாட்ட போட்டிகளை புறக்கணிக்க கோரிக்கை!

எதிர்வரும் 2022 ஆம் ஆண்டில் “கட்டார்” நாட்டில் நடைபெறவிருக்கும் உலக வெற்றிக்கிண்ணத்துக்கான உதைபந்தாட்ட போட்டிகளை புறக்கணிக்குமாறு நோர்வேயின் பல்வேறு உள்ளூர் உதைபந்தாட்ட குழுக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

மிகுந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் “கட்டார்” நாட்டில் உலக வெற்றிக்கிண்ணத்துக்கான உதைபந்தாட்ட போட்டிகள் நடத்தப்படுவதாக முடிவானதன் பின்னர், போட்டிகளை நடத்துவதற்கான மைதானங்கள் அமைப்பது உள்ளிட்ட பூர்வாங்க கட்டுமானங்களை “கட்டார்” மேற்கொண்டு வருகிறது.

2019 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இக்கட்டுமான வேலைகளின்போது இதுவரையும் 6500 கட்டடப்பணியாளர்கள் பலியாகியிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்திருக்கும் நிலையில் “கட்டார்” மீதான கண்டனங்கள் குவியத்தொடங்கியுள்ளன.

“கட்டார்” நாட்டை பொறுத்தவரை அங்கு வெளிநாட்டவர்கள், குறிப்பாக ஆசிய / ஆபிரிக்க நாட்டவர்களே இவ்வாறான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுவருகிற நிலையில், அப்பணியாளர்களுக்கான பாதுகாப்பு தொடர்பில் “கட்டார்” கவனமெடுப்பதில்லை என குற்றம் சாட்டப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆபத்தான கட்டடப்பணிகளில் ஈடுபடுபவர்களுக்கான போதுமான பாதுகாப்பு வசதிகளின்மையால், பணியிலிருக்கும்போது தவறுதலான விபத்துக்களுக்கு ஆளாகி இதுவரை 6500 பணியாளர்கள் பலிகொள்ளப்பட்டுள்ளனர்.

மனிதாபிமான கண்ணோட்டத்தோடு குறித்த கட்டடப்பணியாளர்கள் மீதான எவ்விதமான கரிசனைகளையும் முன்னெடுக்க விரும்பாத “கட்டார்” மீது பல்வேறு மனிதவுரிமை அமைப்புக்கள், சர்வதேச மன்னிப்புச்சபை உள்ளிட்ட அமைப்புக்கள் கண்டனங்களை வெளியிட்டுவரும் நிலையில், குறித்த உலகக்கிண்ணத்துக்கான உதைபந்தாட்ட போட்டிகளில் நோர்வே கலந்துகொள்ளாமல் புறக்கணிக்க வேண்டுமென்ற கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன.

போட்டிகளில் கலந்துகொள்ளாமல் புறக்கணிப்பது என்கிற விடயத்தில் வாதப்பிரதிவாதங்கள் நடைபெறும் நிலையில், “கட்டார்” மீது இதுவிடயத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் அனைவரும் ஒருமித்து நிற்பதாகவும், விடுக்கப்படும் வேண்டுகோள்களின்படி, “கட்டார்” நாட்டில் நடைபெறவிருக்கும் போட்டிகள் புறக்கணிக்கப்பட்டால், அதனால் ஏற்படக்கூடிய பொருளாதார நட்டம், வருடத்துக்கு சுமார் 100 மில்லியன்கள் நோர்வே குறோணர்களுக்கு சமனானதாக இருக்குமென நோர்வே உதைபந்தாட்ட ஒன்றியம் தெரிவிக்கிறது.

பகிர்ந்துகொள்ள