கட்டுநாயக்கவில் எதிர்ப்புக் குரல் எழுப்பிய இளைஞன் மீது சட்ட நடவடிக்கை பாயும்!

You are currently viewing கட்டுநாயக்கவில் எதிர்ப்புக் குரல் எழுப்பிய இளைஞன் மீது சட்ட நடவடிக்கை பாயும்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சண்டித்தனம் காட்டி, தவறான நிலைப்பாட்டை சமூகமயப்படுத்திய இளைஞருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சர்வதேச விமான நிலையத்தில் ஒழுக்கமற்ற வகையில் செயற்பட முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் காரியாலயத்தில் திங்கட்கிழமைஇடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் விசா விநியோக பிரிவில் கடந்த 01ஆம் திகதி அமைதியற்ற தன்மை நிலவியது. விமான நிலையத்தின் வளாகத்தில் ஆவேசமாக பேசி சண்டித்தனம் காட்டிய இளைஞனின் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி அது தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து விசா விநியோகிக்கும் பொறுப்பு இந்திய நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என்ற தவறான நிலைப்பாடு சமூகமயப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இளைஞர் கடந்த 01ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசா விநியோக பிரிவுக்கு தனது மனைவியுடன் வருகை தந்துள்ளார். இவரது மனைவிக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.

வி.எப்.எஸ்.குளோபல் நிறுவனத்துடனான இருதரப்பு சேவை கடந்த 01ஆம் திகதி ஆரம்பமானபோது கட்டார் நாட்டில் உள்ள இந்நிறுவனத்தின் கிளை காரியாலயத்தின் உப தலைவர் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகை தந்து, பணி செயற்பாடுகளை பார்வையிட்டுள்ளார். இதன்போது இந்த இளைஞர் அவரிடம் சென்று தனது மனைவிக்கு விசா பெற்றுக்கொள்வது பற்றி பேசியுள்ளார்.

விசா விண்ணப்பங்களை பரிசீலனை செய்ததன் பின்னர் வி.எப்.எஸ்.குளோபல் நிறுவனத்தின் கிளை காரியாலயத்தின் உப தலைவர், இந்த இளைஞரை வரிசையில் நிற்குமாறு குறிப்பிட்டுள்ளார். இதன் பின்னரே இவர் இந்தியர்கள் இங்கு உள்ளார்கள் என்று முறையற்ற வகையில் செயற்பட்டுள்ளார்.

விசா விநியோக பிரிவில் இந்தியர்கள் எவரும் பணியில் இருக்கவில்லை. 13 இலங்கையர்களே சேவையில் இருந்துள்ளார்கள். இந்தியர்கள், இந்தியர்கள் என்று விமர்சனங்களை முன்வைக்கும் தரப்பினர் அனைவரும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை வாங்குவதை மறுக்கவில்லை. கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருசில அதிகாரிகள் முறையற்ற வகையில் செயற்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதேவேளை

வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வரும்போது 30 நாள் விசாவிற்கு ஒருவருக்கு 50 டொலர் என்ற பழைய கட்டணத்தை பேணுவதற்கும், இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான், மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய ஏழு நாடுகளுக்கு இதுவரை வழங்கப்பட்ட இலவச விசா சேவையை நடைமுறைப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்றக் கூடிய அமைச்சரவை கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு வெளிநாட்டவர் நாட்டிற்குள் நுழையும் போது தொடர்புடைய விசாக்களை வழங்குவதற்கான முழுப் பொறுப்பையும் குடிவரவுத் திணைக்களம் ஏற்கும் என்று ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள செய்தி‌ குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply