என் கணவர் எங்கு இருக்கிறாரோ அங்கு தான் நான் இருப்பேன் என நளினி கூறியுள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேர் நேற்று விடுதலையானார்கள். நளினி வேலூரில் உள்ள தனது வீட்டிற்கு வந்துவிட்ட நிலையில் முருகன் திருச்சி இலங்கை தமிழர்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
வீட்டிற்கு வந்ததும் நளினி தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தப்படி இருக்கிறார். அப்படியான ஒரு சந்திப்பில் அவர் கூறுகையில், விடுதலைக்குப் பிறகும் எனது கணவர் திருச்சி சிறப்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டது எனக்கு வருத்தம்தான். ஆனால் அவரே என்னிடம், கவலைப்பட வேண்டாம் என தெரிவித்தார்.
எழுவர் விடுதலை என நினைத்திருந்த நேரத்தில் ஒருவர் விடுதலை வந்தது மிகவும் கஷ்டமாக இருந்தது. அதற்குப் பிறகு தான் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் உச்ச நீதிமன்றத்தை நாடினோம்.
அப்போதெல்லாம் என் கணவர் என்னிடம், நீ என் மகாராணி. நீ யாரிடமும் கையேந்த கூடாது. நான் உன்னை பார்த்து கொள்வேன் என கூறுவார். அவர் உள்ளவரை எனக்கு கவலை இல்ல என்றார்.
அப்போது நீங்கள் தமிழ்நாட்டில் இருக்க போகிறீர்களா அல்லது லண்டனில் மகளுடன் இருக்க போகிறீர்களா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, என் கணவர் எங்கு இருக்கிறாரோ அங்கு தான் நான் இருப்பேன்.
அவர், நான், எங்கள் குழந்தை அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். அது தான் என்னுடைய ஆசை. அங்கேயே தான் நாங்கள் இருக்கப்போகிறோம். அவர் இலங்கை முகாமிலிருந்து வெளியே வர அனைத்து முயற்சிகளும் நான் எடுப்பேன் என கூறினார்.
மேலும் இலங்கைக்கு போகும் எண்ணம் உள்ளதா என்ற கேள்விக்கு, நான் இலங்கைக்கு எல்லாம் போக வாய்ப்பே இல்லை அவரையும் நான் அங்கே அனுப்ப மாட்டேன் என நளினி தெரிவித்துள்ளார்.