வடக்கில் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம், தனது ஊழியர்களை உடனடியாக பணிக்கு திரும்புமாறு அழைத்துள்ளமை ஊழியர்கள் மத்தியில் பெரும் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் நீடிக்கும் நிலையில் தொடரும் ஊரடங்கு நடைமுறைக்கு மத்தியில் தங்களால் பணிக்கு திரும்ப முடியாத சூழ்நிலை உள்ளதாக மேற்படி நிறுவன பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹலோ ட்ரஸ்ட் என்ற நிறுவனம் வடக்கில், யுத்தத்திற்கு பின்னர் கண்ணிவெடி அகற்றும் மனிதாபிமான பணியை முன்னெடுத்து வருகின்றது. யுத்தத்தின்போது அயவங்களை இழந்தவர்கள் உட்பட யுத்தப் பாதிப்பிற்கு உள்ளான பலர் இந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.

இந்த அமைப்பில் நூற்றுக்கணக்கான பெண்களும் பணியாற்றுகின்றனர். ஆண்களுக்கு நிகராக அவர்கள் கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டை தற்றுணிபுடன் மேற்கொள்கின்றனர். பல இடங்களில் பெண்கள் தனியாகவே கண்ணிவெடிகளை அகற்றுகின்றனர்.
மேற்படி நிறுவனம் கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த எண்ணூறு தொடக்கம் ஆயிரம் வரையிலான ஊழியர்களை நாளை வெள்ளிக்கிழமை (08) பணியில் இணைந்து கொள்ளுமாறு பணிப்புரை விடுத்துள்ளது.

எதிர்வரும் பதினோராம் திகதி மீண்டும் ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தப்படும்போது இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் சாதாரண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று அரச தரப்பு அறிவித்துள்ளது. இந்தச் சூழலில் திடீர் அறிவிப்பு தமக்கு அதிர்ச்சி அளிப்பதாக குறித்த நிறுவன ஊழியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தமது வீடுகளில் இருந்து தமது பணியிடங்களுக்கு செல்கின்றபோது போக்குவரத்து வசதிகள் மற்றும் அனுமதிகள் குறித்த நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.