புதிய சட்டம் தொடர்பில் கடற்றொழிலாளர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியதாக பாராளுமன்றில் தெரிவித்த கருத்து முற்றிலும் பொய்யானது என வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசம் முன்னாள் தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
கடந்த 7ம் திகதி பாராளுமன்றில் கடற்றொழில் புதிய திருத்தச் சட்டமொன்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த சட்டத்தை மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் கருணாகரன் கேள்வியெழுப்பினார்.
தென்னிலங்கை மீனவர்களால் எமது மீனவர்கள் அச்சுறுத்தப்பட்டு தொழில் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதேவேளை இந்திய இழுவைப் படகுகளால் எமது மக்கள் தினந்தினம் உயிரிழப்பதாகவும் கேள்வியெழுப்பினார்.
அதற்கு பதிலளித்த கடற்றொழில் அமைச்சர், தென்னிலங்கையிலிருந்து வந்து இங்கு மீன்பிடியில் ஈடுபடுவது பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது எனவும் அப்படி இருந்தால் தன்னுடன் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவித்தார்.
பூனை கண்மூடிக்கொண்டு பால் குடிப்பதை போல கடற்றொழில் அமைச்சரும் கண்ணை மூடிக்கொண்டு தான் பால் குடிக்கின்றார். ஏனெனில் அவர் பேசுவதெல்லாம் பொய் பொய்யை தவிர வேறொன்னும் இல்லை. நான் சொல்வதைதான் செய்வேன் செய்வதைத்தான் சொல்வேன் என கூறும் அமைச்சர் தென்னிலங்கையிலிருந்து இங்கு வந்து மீன்பிடிக்கும் மீனவர் தொடர்பில் ஒன்றும் தெரியாது.
குறிப்பாக புத்தளம் கற்பிட்டியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட படகுகளில் அட்டைத் தொழிலுக்காக வந்து தொழில் செய்து கொண்டிருக்கின்றனர். இது கூட கடற்றொழில் அமைச்சருக்கு தெரியவில்லையா எனவும் வர்ணகுலசிங்கம் கேள்வியெழுப்பினார்.
அதேவேளை, எங்கெங்கு அட்டைப்பண்ணை வைக்க வேண்டும் என்பதெல்லாம் அமைச்சருக்கு தெரிகின்றது. அத்துடன் தென்னிலங்கையில் அமைச்சர் அனுமதி கொடுக்காமல் இவர்கள் இங்கே எப்படி தொழிலுக்கு வருகின்றார்கள்.
அத்துடன் அங்கிருந்து கடற்றொழில் அமைச்சர் அனுமதியை கொடுத்துவிட்டு இங்கு வந்து அப்படி ஒன்றுமில்லை எனவும் அப்படி இருந்தால் தன்னை தொடர்புகொள்ளுமாறு கடற்றொழில் அமைச்சர் கதைப்பது என்ன கதை என புரியவில்லை.
அதேவேளை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் எழுப்பிய கேள்விக்கு அவரை கதைக்கவிடாமல் குழப்பி கொண்டிருந்தார்.
ஏனெனில் புதிய சட்டத்தை பற்றி கதைக்கும் போது தாம் யாழ்ப்பாணத்தில் மூன்று முறை சம்பந்தப்பட்ட கடற்றொழிலாளர் அமைப்புக்களுடன் கதைத்து ஆலோசித்த பின்னரே அதனை பாராளுமன்றத்திற்கு கொண்டுவந்ததாக தெரிவித்தார்.
கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதியொன்றில் கட்சியின் வேட்பாளர், கட்சியின் ஆதரவாளர்கள், சில வெளியாட்களுடன் கூட்டம் நடத்தப்பட்டது.
அத்துடன் குறித்த கூட்டம் சிங்கள மொழியிலே இடம்பெற்றது. அதேவேளை சிங்களமொழியில் அங்கு கையளிக்கப்பட்ட பிரதிகளில் 70 முதல் 85 வரையான பக்கங்களில் எழுத்துக்கள் அற்ற நிலையில் நடுவில் கொஞ்சம் பக்கத்தை காணாது நடுவிலே வெள்ளைப் பேப்பர் காணப்பட்டது.
இதனை ஒருசில மக்கள் எதிர்த்தவுடன் அதனை திருத்தம் செய்து தமிழ் மொழியில் மொழிபெயர்த்து தருவதாக கூறி சென்றவர்கள் பின்னர் வரவில்லை. ஆனால் கடற்றொழில் அமைச்சர் கூறுகின்றார் 3முறை கடற்றொழில் அமைப்புக்களை சந்தித்து முடிவெடுத்ததாக. இது முற்றிலும் பொய்யானது.
யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களுக்கு இச் சட்டம் தொடர்பில் ஒன்றும் தெரியாது.
நீங்கள் நாட்டை விற்கின்றீர்கள். அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருடத்திற்கு விற்கப்பட்டது. கொழும்பில் ஒரு துறைமுகம் பகுதியளவில் விற்கப்பட்டுள்ளது. எதிர்வரும் கிழமையில் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையமொன்று சீனாவின் ஒரு நிறுவனத்திற்கு விற்கப்படவுள்ளது. அதற்குரிய ஒப்பந்தங்களும் நடைபெற்று வருகின்றது.
இப்படியாக சென்றுகொண்டிருக்கும் நிலையில் இங்கு பினாமி அடிப்படையில் சீனாவிற்கு அட்டைப் பண்ணை கொடுக்கப்படுகின்றது. இவ்வாறு எங்களது வளங்களை நாசமாக்கி விட்டு இன்று சீனத் தூதுவர் கூறுகின்றார் தாங்கள் அங்கிருந்து மீன்களை கொண்டு வந்து வட பகுதியில் குறைந்த விலையில் மக்களுக்கு மீன்களை வழங்கவுள்ளதாகவும் கூறுகின்றார் எனவும் தெரிவித்தார்.