யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இலங்கை அரசு 08-01-2021 வெள்ளிக் கிழமையன்று அழித்ததை கண்டித்தும், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கும் வலுச்சேர்க்கும் முகமாகவும் இவ் வாகன எதிர்ப்பு பேரணி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

42 மணி நேர குறுகிய கால அழைப்பிற்கு இணங்க கனடியத் தமிழ் மக்கள் இன்று (11-01-2021 ஞாயிற்றுக் கிழமை) கனடாவில் பாரிய எதிர்ப்பை இலங்கை அரசின் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பிற்கெதிராக வெளியிட்டிருந்தனர். பிராம்டன் நகரிலிருந்தும், டொரண்டோ நகரிலிருந்தும் மதியம் 12 மணியளவில் வாகனப் பேரணி ஆரம்பமாகியது. இரு வாகனப் பேரணிகளும் Yonge & Sheppard சந்தியில் மதியம் 2 மணியளவில் இணைந்து, Dundas Square சென்று, இறுதியில் Queens Park (ஒன்ராரியோ பாராளுமன்றம்) திடலில் முதலாவது வாகனம் 2.30 மணியளவிலும், கடைசி வாகனம் வந்தடைய 5.30 மணியையும் தாண்டியது.

இவ்வாகனப் பேரணிக்கு டொரண்டோ காவல்துறையும், பீல் பிராந்திய காவல்துறையும் மற்றும் ஒன்ராரியோ பாராளுமன்ற பாதுகாப்புப் பிரிவினரும் முழு ஒத்துழைப்பை வழங்கி இருந்தனர். இவ் வாகனப் பேரணியை ஒருங்கிணைத்திருந்த கனடியத் தமிழர் தேசிய அவையின் (NCCT) தொண்டர்கள், கனடிய சுகாதார அமைச்சின் COVID-19 கால சுகாதார விதிமுறைகளை முற்று முழுதாக கடைப்பிடித்து, மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, நேர்த்தியாக ஒழுங்கமைத்திருந்தனர்.

அனைத்து வாகனங்களிலும் இலங்கை அரசைக் கண்டித்து பலவிதமான பதாகைகள் பொருத்தப்பட்டிருந்தன. இவை மாற்று சமூகத்தினருக்கும் இலங்கை அரசின் திட்டமிடப்பட்ட இன்றும் நடைபெற்று கொண்டிருக்கும் கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பை எடுத்துச் செல்லக்கூடியதாக இருந்தது. மேலும் இப் பேரணியை கனடாவின் பிரதான ஊடகங்களான CP24, 680 News, City News நேரடியாகவும் தொடர்ச்சியாகவும் ஒலி,ஓளிபரப்பிக் கொண்டிருந்தன. கனடாவில் இயங்கும் தமிழ் ஊடகங்களும் இப் பேரணியில் முழுமையாக கலந்து கொண்டிருந்தனர்.

இப் போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுக் கொண்டிருந்த சமகாலத்தில், கனடிய தமிழர் தேசிய அவையின் அரசியல் பீடம் உடனடியாக கனடிய வெளிவிவகார அமைச்சு உட்பட அனைத்து மட்ட அரசியல் பிரமுகர்களுக்கும் இலங்கை அரசின் திட்டமிடப்பட்ட தமிழர்களின் அடையாளங்களை அழிக்கும் இச் செயலை தெரியப்படுத்தியிருந்தனர். இச் செயலைக் கண்டித்து பல அரசியல் பிரமுகர்கள் தங்கள் கண்டனப் பதிவுகளை வெளிப்படையாக தமது சமூக வலைத்தளங்களினூடாக தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஈழத் தமிழ் மக்களுக்கான இன அழிப்பிற்கான பரிகார நீதியும், நிலையான அரசியல் தீர்வும் கிடைக்கும் வரைக்கும் அரசியல் வேலைத்திட்டங்களும், மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டங்களும் சம தளத்திலே இடம் பெறுகின்ற பொழுது நிட்சயம் எம் மக்களுக்கான நிரந்தர தீர்வு கிடைக்கும். ஒன்றுபட்ட தமிழர்களாக ஒரணியில் தொடர்ந்து பயணிப்போம்.



