கனடாவை பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கையை ரஷ்யா முன்னெடுத்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால், பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது தடைகள் விதித்துள்ளன. ரஷ்யாவைத் தனிமைப்படுத்த மேற்கத்திய நாடுகள் ஒரு பக்கம் நடவடிக்கைகளில் இறங்க, மறுபக்கம் ரஷ்யாவே உலக சுகாதார அமைப்பு முதலான அமைப்புகளிலிருந்து வெளியேற முடிவு செய்து தன்னைத்தான் தனிமைப்படுத்திக்கொள்ளத் துவங்கியுள்ளது.
இந்நிலையில், கனேடிய தொலைக்காட்சி மற்றும் வானொலி நிறுவனத்தின் ஒளிபரப்பை நிறுத்த ரஷ்யா முடிவு செய்துள்ளது.
ரஷ்ய அரசு தொலைகாட்சி ஒளிபரப்பை கனடா தடை செய்ததால், அதற்குப் பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கையாக தாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
அதேவேளை தொலைக்காட்சி நிறுவனத்தின் மாஸ்கோ கிளையில் பணியாற்றி வந்த வெளிநாட்டவர்களின் விசாக்கள் மற்றும் அங்கீகாரங்களை ரத்து செய்துள்ள ரஷ்யா, அவர்கள் மூன்று வாரங்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது.