கனடா – ஒன்ராறியோ மாகாணத்தில் முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வாகனம் ஒன்றால் மோதி கொல்லப்பட்ட சம்பவத்தை பயங்கரவாத தாக்குதல் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வர்ணித்துள்ளார்.
கனடா பொதுமன்றத்தில் நேற்று பேசும்போதே பிரதமர் ட்ரூடோ இவ்வாறு தெரிவித்தார்.
அத்துடன் கனடா பொதுமன்றத்தில் பேசிய எம்.பிக்கள் பலரும் இதுவொரு இஸ்லாமிய வெறுப்பு கொள்கையின் விளைவாக இடம்பெற்ற கொடூரம் எனக் கண்டனங்களை முன்வைத்தனர்.
தொற்று நோய் நெருக்கடியால் நீண்ட காலம் வீடுகளுக்குள் முடங்கியிருந்த கனேடியர்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளியே வந்து நடைப்பயணம் உட்பட வெளிப்புறச் சூழலை அனுபவித்து வருகின்றனர்.
ஒன்ராறியோ – லண்டன் நகரில் ஞாயிற்றுக்கிழமை, ஒரு பாட்டி, இரண்டு பெற்றோர் மற்றும் இரண்டு குழந்தைகள் இவ்வாறு வெளியே வந்தனர். ஆனால் துரதிஷ்டமாக அவா்கள் மீண்டும் அதே மகிழ்ச்சியுடன் வீட்டுக்குத் திரும்பவலில்லை என பிரதமர் ட்ரூடோ தெரிவித்தார்.
மிருகத்தனமான, கோழைத்தனமான மற்றும் வெட்கக்கேடான வன்முறைச் செயலால் அவா்கள் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தக் கொலை தற்செயலானது அல்ல. இது எங்கள் சமூகத்தில் இருந்த ஒருவரின் இதயத்தில் இருந்த வெறுப்பால் தூண்டப்பட்ட ஒரு பயங்கரவாத தாக்குதல் எனவும் அவா் குறிப்பிட்டார்.
கன்சர்வேடிவ் தலைவர் எரின் ஓ’டூல், என்.டி.பி. தலைவர் ஜாக்மீத் சிங், பிளாக் கியூபெக்கோயிஸ் தலைவர் யவ்ஸ்-ஃபிராங்கோயிஸ் பிளான்செட், மற்றும் பசுமைக் கட்சி நாடாளுமன்றத் தலைவர் எலிசபெத் மே ஆகியோரும் இந்தக் தாக்குதலுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
ஒன்றாரியோ மாகாணம் ரொரண்டோவுக்கு தென்மேற்கே 200 கிமீ தொலைவில் உள்ள லண்டன் நகரில் ஞாயிற்றுக்கிழமை வாகனம் ஒன்றால் மோதி முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த 74 வயதான பெண், 44 வயதான மற்றொரு பெண், 46 வயதான ஆண், மற்றும் 15 வயதான சிறுமி ஆகியோர் கொல்லப்பட்டனர்.
அந்தக் குடும்பத்தில் 9 வயதான சிறுவன் மட்டும் உயிர்பிழைத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தப் படுகொலை தொடர்பாக 20 வயதான நதானியேல் வெல்ட்மேன் என்ற கனேடிய இளைஞன் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை வழக்கும் கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2017-ஆம் ஆண்டு க்யூபெக் மசூதியில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு கனடாவில் நடந்திருக்கும் இன ரீதியான மிக மோசமான தாக்குதலாக இது அமைந்துள்ளது.
முஸ்லிம்கள் என்பதற்காகவே அவர்கள் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
20 வயதான நதானியேல் வெல்ட்மேன் ஞாயிற்றுக்கிழமை தனது வாகனத்தினால் குடும்பத்தின் ஐந்து உறுப்பினர்களையும் மோதினார். பின்னர் அதிவேகமாக அவர் வாகனத்தை ஓட்டிச் சென்றதாகவும் சாட்சிகளை மேற்கோள் காட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
இது முன்கூட்டியே திட்டமிட்டு செய்யப்பட்ட சதி. இன வெறுப்பால் இப்படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதற்கான சான்றுகள் உள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் அவா்களின் இஸ்லாமிய நம்பிக்கையின் காரணமாக குறிவைக்கப்பட்டதாக நாங்கள் நம்புகிறோம் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.
கொல்லப்பட்ட குடும்பம் சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானில் இருந்து குடியேறியதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.