தமிழ் மக்கள் சார்ந்து நிறைவேற்றப்படவேண்டிய 10 கோரிக்கைகளை கனேடியத் தமிழர் பேரவை முன்வைத்திருக்கும் நிலையில் அதுகுறித்து அவதானம் செலுத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, தம்மோடு இணைந்து பணியாற்றுவதற்கு முன்வருமாறு சர்வதேச நாடுகளைச்சேர்ந்த புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுக்கும் புலம்பெயர் இலங்கையர்களுக்கும் அழைப்புவிடுத்துள்ளார்.
வட, கிழக்கு தமிழ்மக்கள் சார்ந்து நிறைவேற்றப்படவேண்டிய 10 கோரிக்கைகள் அடங்கிய கடிதமொன்று புலம்பெயர் தமிழர் அமைப்பான கனேடியத் தமிழர் பேரவையினால் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவிடம் இன்று புதன்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்துத் தெளிவுபடுத்தும் நோக்கில் நீதியமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
நாட்டில் நிலவிய இன, மத, மொழி ரீதியான வேறுபாடுகளால் கடந்த காலங்களில் நல்லிணக்க செயன்முறை வெகுவாகப் பாதிப்படைந்திருக்கின்றது.
இருப்பினும் தற்போது இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு அவசியமான நடவடிக்கைகள் நீதியமைச்சினால் தீவிர முனைப்புடன் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. எதுஎவ்வாறிருப்பினும் பொதுமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கே முன்னுரிமையளிக்கப்படவேண்டும்.
கடந்த 2015 ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர், அதனூடாகப் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு அவசியமான தீர்வை வழங்குவதற்கு ஏதுவான பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
குறிப்பாக படையினர் வசமிருந்த பெருமளவான காணிகள் பொதுமக்களிடம் மீளக்கையளிக்கப்பட்டன. தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தைச்சேர்ந்த முன்னாள் போராளிகள் பலர் புனர்வாழ்வளிக்கப்பட்டனர்.
அதேபோன்று அண்மையில் அரசியல் கைதிகள் சிலர் விடுவிக்கப்பட்டதுடன், மேலும் சிறையிலுள்ள அரசியல்கைதிகள் குறித்து ஆராயப்படுகின்றது.
அதேபோன்று காணாமல்போனோர் தொடர்பில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்திற்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதுடன் அவ்விசாரணைகளை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் மேலும் துரிதப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு தமிழ்மக்கள் மத்தியில் எம்மீதான நம்பிக்கையைக் கட்டியெழுப்பக்கூடிய வகையில் செயற்பட்டுவருகின்றோம்.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே கனேடியத் தமிழர் பேரவையின் பிரதிநிதி தமிழ்மக்கள் சார்ந்து நிறைவேற்றப்படவேண்டிய கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை என்னிடம் கையளித்திருக்கின்றார்.
நாம் இதுகுறித்து அவதானம் செலுத்துவதற்குத் தயாராக இருக்கின்றோம். அதேவேளை எம்முடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கும் இலங்கையில் முதலீடு செய்வதற்கும் முன்வருமாறு சர்வதேச நாடுகளைச்சேர்ந்த புலம்பெயர் தமிழர்கள், சிங்களர்கள் மற்றும் முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்புவிடுக்கின்றோம் என்று தெரிவித்தார்