கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பில் முன்னேற்றம் கண்டால், விசா வழங்குவதை பரிசீலிக்க இருப்பதாக அமைச்சர் ஜெய்சங்கர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். கனேடிய தூதரக அதிகாரிகள் இந்தியாவின் விவகாரங்களில் தலையிடுவது குறித்த கவலைகளைக் கருத்தில் கொண்டு, நாட்டில் கனேடிய தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்க இந்தியா கோரியது.
இதன் அடிப்படையில் 41 தூதரக அதிகாரிகளை கனடா திரும்ப பெற்றுக்கொண்டது. இந்த விவகாரம் இரு நாடுகளின் நட்புறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியது.
இந்த நிலையிலேயே, கனடாவில் தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்தால், விசா வழங்குவதை பரிசீலிக்கலாம் என ஞாயிறன்று இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கொலை வழக்கில் இந்தியாவுக்கு பங்கிருப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றஞ்சாட்டிய நிலையில், இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவுகள் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகின.
மேலும், ட்ரூடோவின் குற்றச்சாட்டுகளுக்கு சில நாட்களுக்குப் பிறகு, கனேடிய குடிமக்களுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்தது. மட்டுமின்றி, இந்தியாவில் கனேடிய தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்கவும் வலியுறுத்தியது.
விசா விவகாரம் தொடர்பில் மேலும் பதிலளித்த ஜெய்சங்கர், இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவு தற்போது கடினமான கட்டத்தில் உள்ளது, மட்டுமின்றி கனடா முன்னெடுக்கும் அரசியலின் சில பிரிவுகளில் இந்தியாவுக்கு சிக்கல்கள் உள்ளன என்றார்.