கப்டன் ஜெயச்சந்திரனுக்கு வீரவணக்கம்!

You are currently viewing கப்டன் ஜெயச்சந்திரனுக்கு வீரவணக்கம்!
கப்டன் ஜெயச்சந்திரனுக்கு வீரவணக்கம்! 1

‘செவன் பிங்கர்’ என்று ஈழப் போராட்ட முன்னோடிகளால் அழைக்கப்பட்ட கப்டன் ஜெயச்சந்திரன் இன்று காலமாகி விட்டார்.

தலைவரின் தூரநோக்கு சிந்தனைக்கும் / தேசக் கட்டுமானத்திற்கும் ஒரு வாழும் சாட்சியமாக இருந்தவர்.

எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் சில போராளிகளுக்கு ‘மாவீரர்’ கவுரவம் கிடைப்பதில்லை. அது தெரிந்தே அவர்கள் வெடித்தார்கள்.

அதுபோல் மக்கள் தொகுதியிலிருந்து போராட்ட பங்களிப்பின் காரணமாக பலருக்கு நாட்டுப்பற்றாளர், மாமனிதர் போன்ற கவுரவங்கள் வழங்கப்படும் மரபிருந்தது.
ஆனால் விதிவிலக்காக போராளிகள் அல்லாமல் பெரும் அர்ப்பணிப்பையும், தியாகத்தையும் புரிந்த சிலருக்கு எந்த அங்கீகாரத்தையும் வெளிப்படையாக வழங்குவதில்லை. காரணம் போராட்ட இரகசியம் பேணப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அவர்கள் தியாகமும், உழைப்பும் வரலாற்றில் மறைக்கப்பட்டு விடும்.

அப்படியான ஒரு வரலாற்றுக்குச் சொந்தக்காரர்தான் கப்டன் ஜெயச்சந்திரன் அண்ணா.

‘எதோ புலிகள் போராடினார்கள், வீழ்ந்தார்கள்’ என்று தட்டையாக – ஒற்றையாகத்தான் பலர் போராட்டத்தை புரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் அதன் பின்னிருந்த உழைப்பும், தியாகமும் கற்பனைக்கு அப்பாற்பட்டது. மயிர் கூச்செறியக் கூடியது. உலகில் இது போன்ற வரலாறு இதுவரை எந்தப் போராட்டத்திற்கும் இருந்ததில்லை – இனியும் இருக்கப் போவதுமில்லை.

அண்மையில் மறைந்த வாசு நேரு அண்ணா , கப்டன் பிறைசூடி தற்போது கப்டன் ஜெயச்சந்திரன் என்று போராட்டத்தை முன்னகர்த்திய இரகசிய ஆளுமைகள் பலர்
தொடர்ச்சியாகச் சாவடைந்து வருவது நெஞ்சை அறுத்துப் போடுகிறது.

போராட்டத்தின் ஒரு கால கட்ட சாட்சியங்கள் இவர்கள்.

இந்தியா ஒரு நம்பகமான சக்தி இல்லை என்பதை முன்னுணர்ந்து தமிழகத்திற்கும் தமிழீழத்திற்குமான வழங்கல் எந்நேரமும் தடைப்படலாம் என்பதைக் கணித்தது மட்டுமல்ல, மக்களுக்கு தாம் ஒரு சுமையாக இருக்கக்கூடாது என்பதுடன் தமிழீழம் பொருண்மியத்தில் தன்னிறைவு அடைவதென்றால் உள்ளூர் உற்பத்திகளை மட்டும் நம்பியிருக்க முடியாது என்பதை உணர்ந்து அனைத்துலக ரீதியில் ஒரு வர்த்தக வலயத்தை உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்துத் தலைவர் தொடங்கியதுதான் கடல் வணிகம்.

அதற்காக களமிறங்கிய கப்டன் ஜெயச்சந்திரன் பின்பு அனைத்துலகப் பரப்பில் ஆயுத தளபாட வழங்கலையும் வெற்றிகரமாகச் செய்தார்.

இவரது அணி அனைத்துலகக் கடற்பரப்பில் வைத்து ஒருமுறை ஆயுத தளபாடங்கள் கைமாற்றிய கதை நான் எந்த கொலிவூட் திரைப்படத்திலும் பார்க்காத மயிர்க்கூச்செறியும் சாகசங்களைக் கொண்டது.

பின்னாளில் மூத்த தளபதி கிட்டு ஐரோப்பாவில் இருந்து தாயகம் திரும்ப வேண்டி வந்த்ததால் அவரைப் பத்திரமாக அழைத்து வரும் பொறுப்பை தலைவர் கப்டன் ஜெயச்சந்திரன் அவர்களிடம்தான் ஒப்படைத்தார்.

கிட்டண்ணாவை அழைத்துவரும் பயணத்தில் இந்தியக் கடற்படையிடம் சிக்கி புலிகள் வீரச்சாவடைய இவரையும் இவரது அணியையும் இந்தியக் கடற்படை கைது செய்து நீண்டகால சிறைவாசத்தின் பின் விடுவித்தது.

அந்த சித்திரவதைகளின் காரணமாக நோய்வாய்ப்பட்டு இன்று எம்மை விட்டுப் பிரிந்து விட்டார் ‘செவன் பிங்கர்’ என்கிற கப்டன் ஜெயச்சந்திரன்.

சமூக வலைத்தளங்கள் போராட்ட வரலாறுகளை அழிக்கின்றன, உலக பயங்கரவாத அரசுகள் ஒன்றிணைந்து புலிகளை குற்றவாளிகளாக்கத் துடிக்கின்றன, அதற்கேற்ப எமக்குள்ளேயே உள்ள கனவான் அரசியல் செய்பவர்கள் போராட்டத்திற்கு பயங்கரவாத சாயம் பூசத் தலைப்படுகிறார்கள், போராட்ட நியாயத்தைப் புரிந்து கொண்டவர்கள் சிலர் கூட குழு அரசியலுக்குள் சிக்குப்பட்டு தனிமனித வெறுப்பின் காரணமாக வரலாற்றை மறைக்க முற்படும் ஒரு விபரீத சூழலில் கப்டன் ஜெயச்சந்திரன் போன்றோரின் இழப்பு எம்மை நிலைகுலையச் செய்கிறது.

கப்டன் ஜெயச்சந்திரன் அண்ணா போன்ற எண்ணற்ற தியாகிகளுக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலி என்பது சரியான வரலாற்றைப் பதிவு செய்து அடுத்த தலைமுறைக்கு தெளிவான பாதையை அடையாளம் காட்டுவதேயாகும்.

அன்னாருக்குப் புகழ் வணக்கம்.

பகிர்ந்துகொள்ள