இன்று (17.02.2025) நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரை.
கௌரவ குழுக்களின் பிரதித் தலைவர் அவர்களே !
இந்த உள்ளுராட்சி தேர்தல் சட்ட வரைபை அரசு இன்று தாக்கல் செய்கிறது. எதிர்கட்சிகளின் சார்பில், நாங்கள் இந்த சட்ட வரைபை ஆதரிக்கிறோம். இந்த வரைபுக்கு எதிராக வாக்களிப்பதற்கான எந்த கேள்வியும் இல்லை. இந்த வரைபின் பிரிவு 3 பிரிவு 26 இன் விதிமுறைகள் நியமன அறிவிப்புகள் பற்றி குறிப்பிடுகிறது. இந்த வரைபு நிறைவேற்றப்பட்டு, சபாநாயகர் இன்று கையெழுத்திட்டால், வேட்புமனு தாக்கல் செய்ய உங்களுக்கு 3 மாதங்கள் அவகாசம் உள்ளன என்று இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடாத்துவதற்கு அல்ல. வேட்புமனுக்களை அழைப்பதற்காக. இப்போது நாம் சார்ந்த எதிர்க்கட்சிகளும்; இதனைப் பரிசீலிக்க வேண்டியுள்ளது. இதனை அரசாங்கமும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இப்போது நான் எனது கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தனியொரு உறுப்பினர். எனது கட்சியில் நான் மட்டுமே உறுப்பினர். எனது கட்சியின் பொதுச் செயலாளரும் நான்தான்.
நீங்கள் உடனடியாகவே வேட்புமனுக்களை அழைப்பீர்களாயின், அந்த தருணத்தில் என்னால் இந்த நாடாளுமன்றத்திற்கு வருகை தர முடியாது போகும். நான் வேட்புமனுப் படிவங்களை நிரப்பச் செல்ல வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு படிவத்திலும் கையொப்பமிட வேண்டிய நபர் கட்சியின் செயலாளராகிய நான் தான். அப்படியானால் இந்த வரவு செலவுத் திட்ட விவாதத்தில் என்னால் எப்படி பங்கேற்க முடியும்?. இந்த விவாதத்திற்கு வந்து பங்களிப்பதற்காகவே எனது மக்களிடமிருந்து எனக்கு ஆணை கிடைத்துள்ளது. இந்த வரவு செலவுத் திட்டப் பாதீட்டின்போதும் இந்த பாதீடு முடிவடையும் மார்ச் 21 ஆம் தேதி வரை, தயவுசெய்து வேட்புமனுக்களைக் கோர வேண்டாம். அதற்கு முன் நீங்கள் மனுக்களைக் கோருவீர்களாயின் உரிமை பறிக்கப்;பட்டவனாவேன். ஏற்கனவே எனது கட்சியில் இருந்து, எந்தக் குழுவிலும் இல்லாத தனியொரு நாடாளுமன்ற உறுப்பினராக நான் உள்ளேன். எந்த குழுக்களிலும் உள்வாங்கப்படவில்லை. ஏனென்றால் நீங்கள் மிகவும் கண்டிப்பானவர்கள் போன்று, குழுவில் சேரக்கூடிய உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தமட்டில், எண்ணிக்கையை போதுமான அளவு அதிகரிக்க நீங்கள் தயாராக இல்லை, அதனால் நீங்கள் அனைவரும் பெரும்பான்மையை வைத்திருக்கிறீர்கள், நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஒரே காரணத்தால் தான் இங்கு வந்து எனது கருத்தைத் தெரிவிக்க முடிகிறது. வரவு செலவுத் திட்டமானது எமக்கானது. அதில் விவாதித்து வாக்களிக்க முடியாமல் தவிர்க்கப்படுமானால் நீங்கள் திறம்பட என் வாக்குரிமையை மறுக்கிறீர்கள் என்பதே அர்த்தமாகும்.
வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்கு முன்னர் நீங்கள் வேட்புமனுக்களை அழைக்கப் போகிறீர்கள் என்றால், எதிர்க்கட்சியைச் சேர்ந்த மற்றைய கௌரவ உறுப்பினர்கள் பேசியவாறு, வேறு எந்தத் திருத்தங்களையும் பற்றி நான் பேசப்போவதில்லை. இதில் குறைபாடுகள் உள்ளன, அக்குறைபாடுகள் அனைவருக்கும் பொருந்தும். அந்த குறைபாடுகளை எப்படியாவது போக்கிக்கொள்ளலாம். அல்லது எதிர்காலத்தில் சட்டங்களை திருத்தலாம்.
இந்த உள்ளுராட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. தேர்தலை நடத்த வேண்டும் என்று நீண்ட காலத்திற்கு முன்பே உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. எனவே இந்தத் தேர்தல்களை ஒத்திவைக்கக் கூடாது என்பதுதான் உச்ச நீதிமன்றத்தின் சிந்தனை என்பதை உங்கள் அரசாங்கம் அறிந்திருக்கிறது. இருந்தும் நீங்கள் அனைவரும் 3 மாதங்கள் கால அவகாசம் கேட்டீர்கள். நீங்கள் ஒரு மாதம் கேட்டிருக்கலாம். அல்லது இரண்டு வாரங்கள் கேட்டிருக்கலாம். உச்சநீதிமன்றம் ஒத்திவைக்கக் கூடாது என்று தெரிவித்திருந்தாலும் உங்கள் சொந்த சட்டத்தில் நீங்கள் இதனை வைத்திருக்கிறீர்கள். தேர்தலை ஒத்திவைக்கக்கூடாது என்று முன்பு கூறிய நீங்கள், இன்னும் மூன்று மாதங்கள் அவகாசம் கேட்டிருந்தீர்கள். இது உங்கள் சட்டம். நீங்கள் கேட்டது இதுதான்.
நீங்கள் கேட்டவிடயத்தைதான் நான் கேட்கிறேன். ஆனால் இப்போது இதனை தட்டிக்கழிக்கப்பார்க்கிறீர்கள். 3 மாதங்களுக்கு மேல் தள்ளி வைக்குமாறு நாங்கள் கேட்கவில்லை. இந்த தேர்தல்கள் 3 மாதங்களுக்குள் நடக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. தேர்தல் தள்ளிப்போகிறது என்று நீங்கள் குற்றம் சாட்டுவது நியாயமானது. 3 மாதங்களுக்கு மேல் ஒரு நாள் கூட மேலதிகமாக நாங்கள் கேட்கவில்லை. மார்ச் 21 ஆம் தேதி வரை வேட்புமனுக்களை அழைக்க வேண்டாம் என்றே கேட்கின்றேன். உச்ச நீதிமன்றம் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக நடத்துமாறே சொல்கிறது. வரவு செலவுத் திட்ட விவாதங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் கட்சித் தலைவர்களாகவும் நாம் பங்களிக்க வேண்டிய நிலையில், தேர்தல் நடத்துவது நடைமுறைச் சாத்தியமாகுமா?
அதே வேளை, கட்சியின் செயலாளர் என்ற வகையில் வேட்பு மனுக்களில் கையொப்பமிடுவதற்கும் நான் இருக்க வேண்டும் என்பது உடல் ரீதியாக சாத்தியமா? இங்கே ஏதோ தவறு உள்ளது, எனவே நாங்கள் நியாயமற்ற கோரிக்கையை முன்வைக்கவில்லை.
எனக்கு முன் பேசிய பெண்மணி, நீங்கள் தேதியை முடிவு செய்யும் போது நியாயமாக இருக்க வேண்டும் என்று தீர்ப்பில் உள்ளதை மேற்கோள் காட்டினார். மார்ச் 21 ஆம் திகதிக்கு முன்னரல்லாமல் வேட்புமனுக்கள் கோரப்படுவதற்கு இது ஒரு நியாயமான காரணம் அல்லவா?
ஆகவே,
கௌரவ பிரதமர், கௌரவ அமைச்சர் அவர்களே !
இந்த நடைமுறைச் சிக்கல் இருப்பதை நாம் அனைவரும் ஒன்றுகூடி தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சொன்னால், ஆணைகுழுவும் நாங்கள் கேட்கும் நியாயத்தன்மையை வெளிப்படையாகப் புரிந்துகொள்வார்கள். 21ம் தேதி வரை வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு முடியும் வரை இங்கு வந்து பேச வேண்டும், அதுதான் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்ற எங்களுக்கு கிடைத்த ஒரே வாய்ப்பு. இந்த நாடாளுமன்றத்திற்கு வேறு எந்த வகையிலும் என்னால் பங்களிக்க முடியாது.
இன்று 10 நிமிடம் அல்லது 8 நிமிடம் பேசுவதைத் தவிர வேறு எதுவும் இங்கு இல்லை. அதற்கு மேலாக 21ஆம் திகதிக்கு முன்னர் இந்தத் தேர்தலுக்கு அழைப்பு விடுப்பதன் மூலம் நடைமுறையில் கோரிக்கையை மறுக்க முற்பட்டால், இரண்டு அல்லது மூன்று அல்லது நான்கு அல்லது ஐந்து உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்த என்.பி.பி கட்சி அந்த நடைமுறைச் சிக்கலைப் புரிந்து கொள்ளாமல் இருப்பதென்பது துரதிரடவசமானது என்று நான் நினைக்கிறேன். புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
கடந்த முறை மூன்று உறுப்பினர்களுடன் மட்டுமே உங்கள் கட்சி எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது, உங்கள் தலைவர், நாடாளுமன்றக் குழுக்களில் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக எண்ணிக்கையை மாற்றியமைக்குமாறு குரல் கொடுத்தவர். அதனால் எதிர்கட்சிகளுக்கு குறிப்பாக சிறிய கட்சிகளுக்கு ஏதாவது ஒரு வகையில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இன்று நாம் ஒவ்வொரு விடயத்திலும் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளோம் என்பது மற்றொரு விடயமாகும்.
எனவே நீங்கள் ஜனநாயகத்தை உண்மையாக மதிக்கிறீர்கள் என்றால், இது நியாயமற்றதாகும். ஜனநாயகம் என்பது காலக்கெடுவுடன் ஒட்டிக்கொள்வது அல்ல. ஜனநாயகம் என்பது மக்களை முடிந்தவரை பங்காளராக்குவதாகும். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றால், திறம்பட எங்களுக்குரிய உரிமையை மறுக்கிறீர்கள்.இந்த உண்மைகளை எடைபோடுமாறு கௌரவ பிரதமர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சரை நான் கேட்டுக்கொள்கிறேன்.
நாங்கள் எந்த நியாயமற்ற திருத்தங்களையும் கோரவில்லை. நாங்கள் கேட்பது குறைந்தபட்சம் மார்ச் 21 நள்ளிரவு வரை காத்திருங்கள், அதன் பிறகு நீங்கள் வேட்புமனுக்களை அழைக்கலாம், அதன் பிறகு நாங்கள் தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம்.
மற்றொரு விடயத்தையும் நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். முந்தைய பாராளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க மறுத்த இரண்டு கட்சிகளில் நாங்களும் என்.பி.பி. யும் மட்டுமே. ஏனென்றால் அவருக்கு மக்கள் ஆணை இல்லை என்று நாங்கள் உணர்ந்தோம். ஜனாதிபதி விக்ரமசிங்க இனப்பிரச்சினை பற்றி பேசுவதற்கு தயாராக இருப்பதாக சொன்னபோதும் கூட நாங்கள் செல்ல மறுத்தோம், நாங்கள் அவரை சந்திக்க மறுத்தோம், ஏனெனில் மக்கள் ஆணையில்லாத அவருக்கு அது பற்றி விவாதிக்க உரிமையில்லை என்பதனாலாகும். எனவே, சட்டப்பூர்வத்தன்மையை எவ்வளவு தீவிரமாகக் கருதுகிறோம் என்பதையும் ஆணை இல்லாமல் ஒரு பதவிக்கு வருவதன் தவறை எவ்வளவு தீவிரமாகக் கருதுகிறோம் என்பதையும் நீங்களும் அறிந்துள்ளீர்கள். அரகலய ஆரம்பிக்கப்பட்ட தருணத்தில் இந்த பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்று கூறினோம். பிரதமரும் ஜனாதிபதியும் ராஜினாமா செய்த தருணத்தில் இந்த பாராளுமன்றமும் கலைக்கப்பட வேண்டும், அதற்கும் ஆணை இல்லை என்று தெரிவித்தோம்.
ஏனென்றால், 2 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் வழங்கிய ஆணையை முழுமையாக மாற்றியமைக்க வேண்டும் என்று மக்கள் விரும்பியதால் அதனை தெரிவித்தோம்.
எனவே நாங்கள் உண்மையில் தேர்தலை விரும்பியவர்கள், நீங்கள் மார்ச் 21 ஆம் தேதி வரை காத்திருங்கள் என்றே நாங்கள் கேட்கிறோம்,; அரசாங்கம் எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து தேர்தல் ஆணைக்குழவை அணுகி, மார்ச் 21 ஆம் தேதிக்குப் பின்னர் நியாயமான தேதியைக் கேட்டால் அவர்கள் பரிசீலிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் அப்படிச் செய்யாமல் இருப்பது எங்களைப் போன்ற கட்சிகளின் வாக்குரிமையை திட்டமிட்டு மறுப்பதாகவே அமையும்.