கரையொதுங்கிய படகில் வந்த மியன்மார் அகதிகளில் 12 பேருக்கு தடுப்பு காவல்!

You are currently viewing கரையொதுங்கிய படகில் வந்த மியன்மார் அகதிகளில் 12 பேருக்கு தடுப்பு காவல்!
மியன்மாரில் இருந்து இலங்கை கடற்பரப்புக்குள் வந்த 115 ரோகிங்யர்களை முல்லைத்தீவில் இருந்து திருகோணமலை அஷ்ரப் இறங்கு துறைக்கு வெள்ளிக்கிழமை (20)கொண்டு செல்லப்பட்டு திருகோணமலை துறை முகப் பொலிசாரிடம்  ஒப்படைக்கப்பட்டனர்.

 

குறித்த படகில் பயணித்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வாக்கு மூலத்தை பதிவு செய்ததன் பின்பு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் அப்துல் சலாம் சாஹிர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அகதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ச. டெ. சஷ்னி குறித்த நபர்கள் சந்தேக நபர்களன்றி அகதிகளாக கருதப்பட வேண்டும் எனவும் இவர்களை நுகேகொடையில் உள்ள அகதிகள் தங்குமிடமான மிரிகானைக்கு அனுப்புமாறு தனது விண்ணப்பத்தை பதில் நீதிவானிடம் முன்வைத்தார்.

அதனை ஏற்றுக்கொண்ட பதில் நீதிவான் குறித்த மிரிகானை பகுதிக்கு அனுப்புமாறு சிறீலங்கா காவற்துறையினருக்கு கட்டளையிட்டார் தற்போது அனுப்ப முடியாத நிலை உள்ளதால்

இன்று சனிக்கிழமை (21) குறித்த அகதி முகாமுக்கு அனுப்பலாம் என அவர்களது விண்ணப்பத்தை சமர்ப்பித்த பொலிசார் இவர்களில் 115 நபர்களில் 103 நபர்களை திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை வெள்ளிக்கிழமை (20) இரவு முன்னெடுத்தனர்.

திருகோணமலை துறை முக சிறீலங்கா காவற்துறையினர் குடிவரவு குடியகழ்வு சட்டத்தின் பிரகாரம் வழக்கினை பதிவு செய்து படகு ஓட்டுனர், உதவியாக இருந்தவர்கள் மற்றும் பயண ஏற்பாடுகளை ஏற்பாடுகளை செய்த குற்றச்சாட்டில் 12 நபர்களை தடுப்புக்காவலில் வைக்குமாறும் குறித்த பதில் நீதவான் சிறீலங்கா காவற்துறையினருக்கு உத்தரவிட்டார்.

குறித்த 103 நபர்களுக்குத் தேவையான உணவு சுகாதார வசதிகளை ஏற்பாடு செய்து உரிய பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெண்கள்,சிறுவர்களும் உள்ளடங்குவர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்

மியன்மார் நாட்டில் 12 வருடகாலமாக தாம் புனர்வாழ்வு முகாம்களில் வசித்து வந்ததாகவும் தம்மை UN பராமரித்து வந்த நிலையில் அவர்கள் கடந்த 18 மாதங்களுக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேறியதாகவும் இதனால் வாழமுடியாத சூழ்நிலையில் இலங்கை நாட்டுக்கு செல்ல முடிவெடுத்ததாகவும் தெரிவிக்கின்றார்கள்.

இலங்கைக்கு வருகை தரும் நோக்கில் மூன்று படகுகளில் 120 பேர் வருகை தந்ததாகவும் இடைநடுவே இரண்டு படகுகள் பழுதடைந்ததாகவும் இதனால் ஒரு படகில் மற்றைய படகில் வந்த நபர்களும் சேர்ந்து பயணித்ததாகவும் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன் வரும் வழியில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த ஐந்து பேர் பசியினால் உயிரிழந்ததாகவும் அவர்களின் உடல்களை கடலில் வீசிவிட்டு வந்ததாகவும் அந்த குடும்பத்தில் ஒரு சிறுமி உயிர் தப்பி தம்முடன் இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கைக்கு வருவதற்காக தங்களுடைய சொத்துகளை விற்று தங்கள் நாட்டின் பெறுமதியில் ஒவ்வொருவரும் 8 இலட்சம் ரூபா வழங்கி படகினை கொள்வனவு செய்து கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் திகதி அங்கிருந்து புறப்பட்டதாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply