கர்ப்பவதி தாய்மார் கொரோனா வைரஸ் தடுப்பூசி பெற்றுக்கொள்வது பாதுகாப்பானது. இது கற்பவதிகளிடையே அதிகரிக்கும் கொவிட் தொடர்பான அபாயங்களைக் குறைக்கிறது என சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் சுவிட்சர்லாந்து நுண்ணுயிரியல் மற்றும் நோய் எதிர்ப்பியல் நிறுவனம் மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவுகள் ஸ்பூட்னிக் செய்தி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கர்ப்பவதிகள் கொவிட் தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம் அவர்களின் கருவுக்கும், நஞ்சுக்கொடிக்கும் பாதுகாப்பு கிடைக்கிறது. அத்துடன் கர்ப்ப கால ஆபத்துகளில் இருந்தும் தடுப்பூசி பாதுகாப்பை அதிகரிக்கிறது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சம வயது கொண்ட ஏனைய பெண்களைக் காட்டிலும் கர்ப்பவதிகளிடையே கொரோனா தொற்று பரவுவதற்கான ஆபத்து 70 வீதம் கூடுதலாக உள்ளது. அத்துடன், சாதாரண பெண்களுடன் ஒப்பிடுகையில் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயமும் மரண ஆபத்தும் கற்பவதிகளிடையே 3 மடங்கு அதிகமாக உள்ளது எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கர்ப்பவதி உடலில் வைரஸ் வேகமாகப் பெருகி நஞ்சுக்கொடி செல்களைத் தாக்கும். இது தடுப்பூசி போடப்பட வேண்டியதன் அவசியத்தை நிரூபிக்கிறது என நுண்ணுயிரியல் மற்றும் நோய் எதிர்ப்பியல் நிறுவன ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.