கறுப்பு யூலை
மார்பில் இறுகிக்கிடக்கும்
பெருவலியொன்றின் சோகம்!
நெருப்புக்குள் தமிழரின்
உயிர்கள் துடித்து அடங்கிய
காலம்!
இனவழிப்பின் பிடியில்
துரத்தித்துரத்தி
குதறப்பட்ட கொடிய
கணங்களினால்
மண்ணில்
இரணங்கள்
மரணங்களாக
மாறிய கோலம்!
ஜே ஆர் எனும்
காட்டேறியால்
ஊர்களெல்லாம்
ஒவ்வொரு
உயிர்களாய்
ஓநாய்களால்
கடித்துக்குதறிய
ஓலத்தின்
காயாத வடுக்கள்!
ஒற்றையாட்சி
தமிழினத்தின்
சுடுகாடு!
அடிமைப்படுத்தப்படும்
ஆதிக்கவெறியினால்
நிர்வகிக்கப்படும்
நரகவீடு!
இதற்கு மேலும்
ஒன்றாய் வாழ்ந்தால்
தமிழருக்கு
பிணவீடு!
எடுத்து ஊதட
உரிமைக்கான
சங்கு!
பிரியடா உனக்கான
நாடு!
இனியொரு
விதிசெய்வோம்
இறத்தலைவிட
இலக்கே மேன்மையென
மானத்தமிழினின்
மனதிலே
ஊனத்தை
உடைத்த நாளாகவும்
உணர்வினை
உதைத்தது
நெருப்பு யூலை!
கறுப்பு யூலை
வெறுப்பை விதைத்து
எமக்குள் பிரிவை
புதைத்தநாள்!
இனி எப்போதும்
ஒருமைப்பாடு
ஓங்காது!
நிலத்தை பிளந்து
நீ அங்காலும்
நாம் இங்காலும்
இருக்கும் நாள்தான்
உமக்கும் விடுதலை!
எமக்கும் விடுதலை!
தூயவன்