கலப்பு பொறிமுறை வேண்டாம்’ தமிழ்த் தாய்மார்கள் மன்னிப்புச் சபையின் தலைவரிடம் வலியுறுத்தல்!

You are currently viewing கலப்பு பொறிமுறை வேண்டாம்’ தமிழ்த் தாய்மார்கள் மன்னிப்புச் சபையின் தலைவரிடம் வலியுறுத்தல்!

இறுதிக்கட்டப் போரின் போது இலங்கை அரச பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த அல்லது அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்ற தமது உறவினர்களுக்கு சர்வதேச பொறிமுறையின் ஊடாக நீதி வழங்கப்பட வேண்டுமென யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் தலைவரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

மே 18, 2009 இல் போர் முடிவுக்கு வந்த தினத்தில் இருந்து, தமிழ் மக்களுக்கு நீதி மறுக்கப்பட்ட 15ஆவது வருடத்தில், முள்ளிவாய்க்கால் மண்ணில் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலை நினைவேந்தலில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்திருந்த சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னஸ் கலமார்டிடம் (Agnes Callamard), நினைவேந்தல் தினத்திற்கு முன்தினம் முல்லைத்தீவில் நடைபெற்ற கலந்துரையாடலில் தமிழ் தாய்மார்கள் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளனர்.

ஏழு வருடங்களாக தனது அன்புக்குரியவர்களைத் தேடும் இடைவிடாத பயணத்தின் போது புலனாய்வு அமைப்புகளின் அச்சுறுத்தல்கள் குறித்தும் அக்னஸ் கலமார்டிடம் தெளிவுபடுத்தியதாக, சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி தெரிவித்தார்.

“எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதற்கு இலங்கையில் நீதி கிடைக்காது.  சர்வதேச பொறிமுறைக்குள் கொண்டுபோய் எங்களுக்கான நீதி பெற்றுத்தர வேண்டும்.  மீண்டும் மீண்டும் ஆணைக்குழுக்களை உருவாக்கி இலங்கையில்  விசாரணைகள் செய்யக்கூடாது என்பதையும், நாங்கள் எங்கள் உறவுகளை அவர்களிடம் எப்படி கையளித்தோம்.  எங்களை அரசாங்கம் எப்படி விசாரணை செய்கிறது. புலனாய்வுத்துறை எங்களை எப்படி அச்சுறுத்துகிறார்கள். எங்களை போராட்டங்களை எவ்வாறு முறியடிக்கின்றார்கள் என்பதை எடுத்துக்கூறினோம்.”

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள எட்டு மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் பங்கேற்ற கலந்துரையாடலின் பின்னர், அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி, அன்புக்குரியவர்களுக்கான நீதிக்கான போராட்டத்தில் கலப்பு நீதிமன்றத்தை எவ்வகையிலும் ஏற்கப்போவது இல்லை என்ற விடயத்தை சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகத்திடம் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

“எங்களுக்கு கலப்பு நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையில்லை. கலப்பு நீதிமன்றத்தை ஏற்றுக்கொள்ளமாட்டோம்.  எங்களுக்கு சர்வதேச நீதிமன்றம் வேண்டும் என்பதை நாம் உறுதிப்படுத்தினோம். அதில் வெளிநாட்டு நீதவான்களை வைப்போம் என அவர் கூறினார். அவர்கள் வெளிநாட்டு நீதிபதிகளாக இருந்தாலும் சட்டத்தரணிகள் இங்கு உள்ளவர்கள் தானே. இங்குள்ளவர்களிடம் எங்கள் பிரச்சினைகளை சொல்ல முடியாது.  ஆனால் சர்வதேச பொறிமுறைதான் எங்களுக்கு சரி. அது நடந்தால் நாங்கள் சாட்சியமளிக்க தயாராக இருக்கின்றோம்.”

இலங்கைக்கு எதிரான போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக கலப்பு நீதிமன்றத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை பரிந்துரைத்துள்ளது.

பல வருடங்களாக இராணுவத்தினரால் பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டு இன்னும் விடுவிக்கப்படாத தமிழ் மக்களின் காணிகள் தொடர்பிலும் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளரிடம் தெளிவுபடுத்தியதாக தெரிவித்த தமிழ்த் தாய்மார்கள் மேலும் தெரிவிக்கையில், போரின் இறுதி நாட்களில், கரையோரப் பகுதியில் சிக்கி, எறிகணை வீச்சு, வான்வழித் தாக்குதல், பீரங்கித் தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற முடியாமல் தவித்த தமிழ் மக்களை பட்டினிச் சாவில் இருந்து காப்பாற்ற உதவிய முள்ளிவாய்க்கால் கஞ்சியின் வரலாற்றுச் சிறப்பு குறித்தும் அவருக்கு விளக்கமளித்ததாக குறிப்பிட்டனர்.

வன்னி மண்ணுக்குள் காலடி எடுத்து வைத்ததன் மூலம், வெளிநாட்டில் இருந்து பெற்றுக்கொண்ட  தகவல்களைக் காட்டிலும், போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் பிரச்சினைகளை நன்கு புரிந்து கொள்ள முடிந்ததாக, சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னஸ் கலமார்ட் தெரிவித்ததாக தமிழ்த் தாய்மார்கள் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தனர்.

இந்தக் கூட்டத்திற்கு அடுத்த நாள் முள்ளிவாய்க்கால் மண்ணில் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலை நினைவேந்தலில் கலந்து கொண்ட அக்னஸ் கலமார்ட், இந்த நினைவேந்தல் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்குவதற்கு சர்வதேச சமூகம் தவறியதை நினைவுபடுத்துவதாக ஊடகங்களிடம் தெரிவித்தார்.

“இன்றைய ஆண்டு நிறைவானது இலங்கையின் மூன்று தசாப்த கால உள்நாட்டு ஆயுத மோதலில் பாதிக்கப்பட்ட பலருக்கு நீதி வழங்குவதில் இலங்கை அதிகாரிகள் மற்றும் சர்வதேச சமூகத்தின் கூட்டுத் தோல்வியின் கடுமையான நினைவூட்டலாகும். 15 வருடங்களுக்கு முன்னர், போரின் இறுதி நாட்களில் எண்ணற்ற பொதுமக்கள் உயிர் இழந்த அதே இடத்தில் நிற்பது வருத்தமளிப்பதாக உள்ளது.”

காசா, உக்ரைன் உள்ளிட்ட போர் மோதல்கள் மீது உலகின் கவனம் குவிந்துள்ளதால் 15 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் நடந்த குற்றங்களுக்கு நீதி வழங்கும் பொறுப்பை இழக்கும் அபாயம் தொடர்பிலும் அவர் எச்சரித்துள்ளார்.

சர்வதேச சட்டத்தின் கீழ் குற்றங்கள் மற்றும் மோதலின் இரு தரப்பிலும் உள்ளவர்கள் செய்த சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டங்களின் பிற மீறல்கள் பற்றிய நம்பகமான ஆதாரங்களை ஐ.நா விசாரணைகள் கண்டறிந்துள்ள போதிலும், இது குறித்து சுயாதீனமான அல்லது பாரபட்சமற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

“இதற்கிடையில், மோதலின் போது பலவந்தமாக காணாமல் போனவர்களின் குடும்பங்கள் தங்கள் அன்புக்குரியவர்களைத் தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் நீதி கேட்டு எவ்வளவு காலம் வீணாகிறார்கள் என்பதை கேட்பது உண்மையிலேயே மனவேதனை அளிக்கிறது.”

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு இரண்டு நாட்களின் பின்னர், அரசாங்கத்தின் போர் வெற்றி நினைவேந்தலின் ஒரு நாளின் பின்னரும் அக்னஸ் கலமார்ட் இலங்கை வெளிவிவகார அமைச்சரை கொழும்பில் சந்தித்திருந்தார்.

எமது தேசத்தின் சுதந்திரம் மற்றும் அமைதிக்காக  இலங்கை இராணுவத்தின் 26,000ற்கும் மேற்பட்டோர் தமது இன்னுயிர்களை தியாகம் செய்ததாகவும், ஆயிரக்கணக்கானோர் தமது உடல் அங்கங்களை தியாகம் செய்ததாகவும் அமைச்சர் கூறியிருந்தார்.

“சிறியளவு உள்நாட்டு மக்களை திருப்திப்படுத்த வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுபவர்களால் இலங்கையின் உள்விவகாரங்களில் வெளியுலக செல்வாக்கு கொண்டு வரப்படுவது குறித்து நான் அதிருப்தி தெரிவித்தேன்.” என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் (முன்னர் ட்விட்டர்) குறிப்பிட்டுள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply