யாழ்ப்பாணம் ஆரியகுளமானது தற்போது கொழும்பு கோல்பேஸினை விட மிக மோசமான அளவிற்கு சென்றுகொண்டிருப்பதாக யாழ் மாநகர சபை உறுப்பினர் ப.தர்சானந் தெரிவித்துள்ளார்.
யாழ் ஆரிய குளம் தொடர்பில் செய்தி ஊடகத்திற்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆரிகுளத்துச் சூழலில் ஜோடியாக குடைகளுடன் சென்று பொழுதினை கழிக்க அனுமதிக்கிறார்கள். இது ஒரு கலாசார சீர்கேட்டிற்கு ஆரம்பமாக உள்ளது .இதே போன்று பண்ணை கடற்கைரையினையும் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கிறது.
மகிழ்வீட்டுத் திடல் என்று சொல்லக்கூடிய அவ்விடத்திற்கு குடும்பத்துடன் சென்று பொழுதினை கழிக்க வேண்டுமே தவிர இவ்வாறான அநாகரிகமான செயல்களை யாழ்.நகர மத்தியில் நடாத்துவது என்பது தவறானதாகும்.
வெளி இடத்தில் இருந்து வரும் நபர்கள்,அல்லது சிங்கள மாணவர்கள இவ்வாறாக நடந்துகொள்ளும் போது இவ்விடத்துக்கு எதிராக மாணவர்கள் கல்வி கற்கும் தனியார் கல்வி நிலையங்கள் உள்ளன.இதனால் அந்த மாணவர்களின் கவனம் சிதறடிக்கப்படுகிறது .
இது எதிர்காலத்தில் எங்கள் சமுதாயத்தினருக்கு மிக மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் இது தொடர்பாக இனி வருகின்ற கூட்டத்தில் விவாதிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார் .