அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள மான்டேரி பூங்காவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 10 பேர் வரை கொல்லப்பட்ட நிலையில் கொலையாளிக்கு சம்பந்தப்பட்ட வெள்ளை வேனை SWAT பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மான்டேரி பூங்காவில் திடீரென நுழைந்த மர்ம நபர், துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை சரமாரியாக சுடத் தொடங்கினார்.
இந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் வரை உயிரிழந்த நிலையில் மேலும் பத்து பேர் காயமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை இந்த ஆண்டின் 33 வது வெகுஜன துப்பாக்கிச் சூடு என்று அமெரிக்காவின் துப்பாக்கி வன்முறை காப்பகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் லாஸ் ஏஞ்சல்ஸ் கன்ட்ரி ஷெரீப் அலுவலகம் துப்பாக்கி சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரின் அடையாளத்தை வெளியிட்டுள்ளது. அதில் அந்த நபர் சுமார் 5’10” அங்குலம் உயரம் கொண்ட ஆசிய ஆண் என்றும், சந்தேக நபர் கருப்பு தோல் ஜாக்கெட், பீனி மற்றும் கண்ணாடி அணிந்திருந்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபருடன் தொடர்புடையதாக கருதப்படும் வெள்ளை வேனை SWAT பொலிஸார் குழு முற்றுகையிட்டுள்ளது.
கலிபோர்னியாவில் உள்ள டோரன்ஸ் என்ற இடத்தில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் சந்தேக நபர் இருந்ததாக கருதிய வேன் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
Torrance இல் SWAT பொலிஸாரால் அணுகப்பட்ட முதல் வேனின் சாரதி இருக்கையில் ஒரு சடலம் காணப்பட்டதாகத் தெரிகிறது. சடலம் சந்தேக நபருடையதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
ஆனால் டோரன்ஸ் மான்டேரி பூங்காவிலிருந்து 30 மைல் தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆயுதமேந்திய SWAT பொலிஸார் தற்போது கொலையாளியுடன் சம்பந்தப்பட்ட வாகனம் என்ற நோக்கில் மற்றொரு வெள்ளை வேனில் சோதனை நடத்தி வருகின்றனர்.