“leopard – 2” வகை கவசவாகனங்களை உக்ரைனுக்கு வழங்குவதற்கு ஜெர்மனி ஒப்புக்கொண்டுள்ளதாகவும், ஜெர்மனியிடமிருந்து இவ்வகை கவசவாகனங்களை தமது பயன்பாட்டுக்கென வாங்கியுள்ள நாடுகளும் அக்கவசவாகனங்களை உக்ரைனுக்கு வழங்க முடியுமெனவும் ஜெர்மனி அறிவித்துள்ளது.
ஜெர்மனியின் இம்முடிவை மிகக்கடுமையாக விமர்சித்திருக்கும் ரஷ்யா, ஜெர்மனியின் இம்முடிவு, நிலைமைகளை மிக ஆபத்தான நிலைக்கு கொண்டு செல்வதோடு, மிகமிக கடுமையான பின்விளைவுகளையும் ஏற்படுத்துமென எச்சரித்துள்ளதோடு, களநிலையில் ஜெர்மனியின் கவசவாகனங்கள் செயலிழக்க வைக்கப்படுமெனவும் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பாவில் தற்போது நிலவும் குளிர்காலம் முடிவுக்கு வருமுன்னரே ரஷ்யாவை இராணுவரீதியில் தோற்கடிக்க முனையும் அமெரிக்காவும், நேட்டோவும் மிக அதிகளவிலான கனரக ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்குகின்றன. எனினும், ஜெர்மனியின் “leopard – 2” வகையான கவசவாகனங்கள் தமக்கு மிக முக்கியமானவையென கருதும் உக்ரைன், மிக விரைவாக இந்த கவசவாகனங்களை தருமாறு வேண்டுகோள் விடுத்தும் தயங்கிய ஜெர்மனி, தற்போது அமெரிக்க / நேட்டோ அழுத்தங்களுக்கு பணிந்துள்ள ஜெர்மனி, கவச வாகனங்களை உக்ரைனுக்கு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
குறித்த கவசவாகனங்களை உக்ரைனுக்கு வழங்குவதானது, நிலைமைகளை மேலும் சிக்கலாகும் என கருதிய ஜெர்மனியின் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர், கவசவாகனங்களை உக்ரைனுக்கு வழங்குவதை நிராகரித்திருந்த நிலையில், ஜெர்மனிக்கும், நேட்டோவுக்கும் இடையில் எழுந்த சிக்கல்களையடுத்து அவர் பதவி விலகியிருக்கும் நிலையில், பொறுப்புக்கு வந்திருக்கும் ஜெர்மனியின் புதிய பாதுகாப்பு அமைச்சர் மூலம் நேட்டோவும், அமெரிக்காவும் தமது அழுத்தங்களில் வெற்றியடைந்துள்ளதாக அவதானிப்பாளர்கள் கருத்துரைத்துள்ளனர்.