பிரித்தானிய மகாராணியார் எலிசபெத் அவர்களின் உடல்நிலை மிக ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஸ்கொட்லாந்திலுள்ள “Balmoral” அரண்மனையில் வைத்து, மகாராணியருக்கு தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
96 வயதான மகாராணியார், கடந்த 70 வருடங்களாக பிரித்தானியாவினதும், பிரித்தானிய முடியாட்சியை ஏற்றுக்கொண்ட நாடுகளினதும் மகாராணியாராக திகழ்ந்து வருகிறார். உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்ட அவரின் உடல்நிலை ஆபத்தான நிலைக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ள அதேநேரத்தில், மகாராணியாரின் இறுதிக்கணங்கள் நெருங்கிவருவதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. மகாராணியாரின் உடல்நிலை பற்றிய செய்திகளை வெளியிடும் “BBC” நிறுவனத்தின் பணியாளர்கள் கறுப்பு உடை அணிந்த நிலையில் செய்திகளை வெளியிடுவது உற்று நோக்கத்தக்கது.
இந்நிலையில், அரச குடும்பத்தினர் அனைவரும், ஸ்கொட்லாந்திலுள்ள “Balmoral” அரண்மனையில் கூடி வருவதாகவும், மகாராணியார் இயற்கை எய்தும் நிலையில், தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய காரியங்கள் பற்றிய திட்டமிடல்களும் நடைபெறுவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
மகாராணியார் இயற்கை எய்தும் பட்சத்தில், அவரது மரணம் உறுதிப்படுத்தப்பட்டதும், “The London Bridge is down” என்னும் சங்கேத வார்த்தை, மகாராணியாரின் பிரத்தியேக செயலாளரினால் பிரித்தானிய பிரதமருக்கு அறிவிக்கப்படுமெனவும், அதன் பின்பே நாட்டு மக்களுக்கும், உலகத்துக்கும் மகாராணியாரின் மறைவு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மகாராணியாரின் மறைவு தொடர்பிலும், அதனைத்தொடர்ந்து ஆற்றப்பட வேண்டிய காரியங்கள் தொடர்பிலும் எவ்வாறான விடயங்கள் கையாளப்பட வேண்டும் என்பது தொடர்பிலான அறிவுறுத்தல்கள் 1960 ஆம் ஆண்டிலேயே இறுதி செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.