காசாவில் மீண்டும் போர் தாக்குதலை தொடங்கி இருப்பதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படை தகவல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கையில் 6 நாள் போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த நிலையில் நேற்று இரண்டாவது முறையாக மேலும் 2 நாட்களுக்கு போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
6 நாள் போர் நிறுத்தத்தில் இதுவரை மொத்தமாக இரு தரப்பில் இருந்தும் 300க்கும் மேற்பட்ட பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் காசாவில் மீண்டும் ராணுவ தாக்குதலை தொடங்கி இருப்பதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படை தகவல் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் படைகளுக்கும், இஸ்ரேலிய படைகளுக்கும் மேலும் 2 நாள் போர் நிறுத்தம் நீடிக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இஸ்ரேலிய பாதுகாப்பு படை இதனை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இஸ்ரேலிய பாதுகாப்பு படை தெரிவித்த தகவலில், ஹமாஸ் படையினர் போர் நிறுத்தத்தை மீறி விட்டதாகவும், இரண்டு ராக்கெட் தாக்குதலை நடத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் பிணைக் கைதிகள் பரிமாற்றம் தொடர்பான புதிய விவரத்தை ஹமாஸ் வழங்க தவறிவிட்டதாகவும் இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.
சண்டை ஒரு பக்கம் தொடங்கி இருப்பினும், மற்றொரு பக்கம் பிணைக் கைதிகள் பரிமாற்றம் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.