காசாவில் 6 பிணைக்கைதிகள் பிணமாக மீட்பு!

You are currently viewing காசாவில் 6 பிணைக்கைதிகள் பிணமாக மீட்பு!

பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி இஸ்ரேல் நாட்டின் மீது திடீர் தாக்குதல் நடத்தி சுமார் 1,200 பேரை கொன்று குவித்தனர். மேலும் 250-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்து காசாவுக்கு இழுத்து சென்றனர். இதில் அமெரிக்கர்கள் உள்பட வெளிநாட்டினர் சிலரும் அடங்குவர்.

திடீர் தாக்குதலில் நிலைகுலைந்த இஸ்ரேல் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக வெகுண்டெழுந்தது. அந்த அமைப்பை அடியோடு ஒழித்து, பணய கைதிகள் அனைவரையும் மீட்போம் என சூளுரைத்து காசா மீது போர் தொடுத்தது. இந்த போர் 10 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. இதில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இதனிடையே சர்வதேச நாடுகளின் முயற்சியின் பலனாக கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார காலத்துக்கு தற்காலிகமாக போர் நிறுத்தப்பட்டது. அதற்கு ஈடாக ஹமாஸ் வசம் இருந்த சுமார் 100 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து மீண்டும் அங்கு போர் நிறுத்தத்தை கொண்டுவர உலக நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. ஆனால் அதில் உடன்பாடு எட்டப்படாமல் இழுபறி நீடித்து வருகிறது.

அதேவேளையில் காசா மீதான தாக்குதல்களை தொடர்ந்து தீவிரப்படுத்தி வரும் இஸ்ரேல் அங்கு சிக்கியுள்ள பிணைக்கைதிகளை மீட்பதற்காக நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காசாவில் உள்ள ஒரு சுரங்கத்தில் இருந்து கைத் பர்கான் அல்காதி என்ற 52 வயதான பணய கைதி உயிருடன் மீட்கப்பட்டார்.

இந்த நிலையில் தெற்கு காசாவின் ரபா நகரில் உள்ள ஒரு சுரங்கத்தில் இருந்து பயண கைதிகள் 6 பேரின் உடல் மீட்கப்பட்டது. அவர்களில் இஸ்ரேலிய-அமெரிக்கரான கோல்ட்பர்க்-போலினும் ஒருவர் ஆவார்.

தங்கள் வீரர்கள் சுரங்கத்தை சென்றடைவதற்கு சற்று நேரத்துக்கு முன்பாக பிணைக்கைதிகள் 6 பேரையும் ஹமாஸ் அமைப்பினர் கொடூரமாக கொலை செய்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

இந்த நிலையில் பணய கைதிகளின் மரணத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, இந்த படுகொலைக்காக ஹமாசுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என சூளுரைத்துள்ளார். மேலும் பணய கைதிகளை கொன்றதன் மூலம் அவர்கள் (ஹமாஸ்) அமைதி ஒப்பந்தத்தை விரும்பவில்லை என்பது தெளிவாகி உள்ளது என அவர் குற்றம் சாட்டினார்.

பிணைக்கைதிகள் கொலை செய்யப்பட்ட நிலையில், உயிருடன் உள்ள மற்ற பிணைக்கைதிகளை உயிரோடு மீட்கும் வகையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இஸ்ரேல் அதிபர் நேதன்யாகு உடனடியாக கையெழுத்திட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதில் சில போலீசார் காயம் அடைந்த நிலையில் 29 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே இஸ்ரேலை சேர்ந்த தன்னார்வலர் அமைப்பு ஒன்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டத்தை நடத்த அழைப்புவிடுத்துள்ளது. இதனால் இன்று இஸ்ரேல் நாட்டின் முழுவதும் பொது சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 97 பிணைக்கைதிகள் உள்ளனர். அவர்கள் ஐந்து வயதிற்கு உட்பட்ட இரண்டு குழந்தைகளும் ஆவார்கள். ஏற்கனவே 33 பேர் உயிரிழந்ததாக இஸ்ரே் ராணுவம் தெரிவித்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments