காசாவில் இதுவரை 18% கட்டிடங்கள் தரைமட்டம் ஆக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலிய ராணுவ படைக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கும் இடையிலான சண்டை 2 மாதங்களாக நீடித்து வருகிறது.
காசாவில் போர் நிறுத்தத்தை கொண்டு வருவதற்காக ஐக்கிய நாடுகள் சபை பெரும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது, ஆனால் இதற்கு இஸ்ரேல் தரப்பு எத்தகைய இணக்கமும் வழங்காமல் தொடர்ந்து தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.
இஸ்ரேல் நடத்தி வரும் வான் தாக்குதலில் காசா பகுதியில் உள்ள கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகள் முழுவதுமாக சிதைப்பட்டு வருகிறது. அத்துடன் தரைவழி தாக்குதலினால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
இந்நிலையில் காசாவில் உள்ள 18% கட்டிடங்கள் இஸ்ரேலிய தாக்குதலில் அழிக்கப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கைகோள் புகைப்படங்களை ஆதாரமாக கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் செயற்கைகோள் மையம் இதனை தெரிவித்துள்ளது.
அதில் மே 1, மே 10, செப்டம்பர் 18, அக்டோபர் 15 மற்றும் நவம்பர் 7ம் திகதிகளில் எடுக்கப்பட்ட காசா புகைப்படங்களையும் நவம்பர் 26ம் திகதி எடுக்கப்பட்ட காசா புகைப்படங்களையும் ஒப்பிட்டு இந்த தகவலை ஐ.நா செயற்கைகோள் மையம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில், காசாவில் இதுவரை நடத்தப்பட்ட தாக்குதலில் 10,049 கட்டிடங்கள் தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளன. அத்துடன் 8, 243 கட்டிடங்கள் பலத்த சேதமடைந்துள்ளது, 19,087 கட்டிடங்கள் லேசான சேதமடைந்துள்ளன என தெரியவந்துள்ளது.