பாலத்தீனம் – காசா பகுதியில் ஹமாஸ் இயக்கத்தினரின் இலக்குகளைக் குறிவைத்து இன்று புதன்கிழமை காலை முதல் இஸ்ரேல் மீண்டும் தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இஸ்ரேலின் தாக்குதல்களால் இன்று காலை முதல் காசா நகரில் குண்டுகள் வெடிக்கும் பாரிய சத்தங்கள் தொடர்ந்து கேட்டவண்ணம் இருப்பதாக அங்குள்ள சர்வதேச செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
காசா பகுதியில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை வெடிபொருள்களைக் கொண்ட பலூன்கள் இஸ்ரேலை நோக்கி பறக்கவிடப்பட்டதாக இஸ்ரேலியத் தரப்புக்கள் கூறியுள்ளன. இதனால் பல இடங்களில் தீப்பற்றியதாக இஸ்ரேலிய தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே 11 நாட்கள் தொடர்ந்த உக்கிர மோதல்கள் கடந்த மே 21-ஆம் திகதி முடிவுக்கு வந்த பின்னர் இந்தப் பிராந்தியத்தில் இன்று மீண்டும் மிகப் பெரிய தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.
காசா பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் காசா இயக்கத்தின் எச்சரிக்கையை மீறி கிழக்கு ஜெருசலேம் பகுதியில் யூத தேசியவாதிகள் நேற்று பேரணி நடத்தினர். இதனைத் தொடர்ந்தே இந்த மோதல் உருவாகியுள்ளது.
கான் யூனிஸ் மற்றும் காசா நகரத்தில் உள்ள ஹமாஸ் இராணுவ நிலைகளை இலக்கு வைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் பாதுகாப்பு படைத் தரப்பு (IDF) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதிகளில் இருந்தவாறு பயங்கரவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. தொடர்ச்சியாக பயங்கரவாத செயற்பாடுகள் இந்தப் பகுதிகளில் இருந்து இடம்பெற்று வரும் நிலையில் மீண்டும் ஒரு போரைத் தொடங்குவது உட்பட அனைத்துக்கும் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தயாராக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, இஸ்ரேல் நடத்திவரும் வான்வழித் தாக்குதலில் பாலஸ்தீனம் – காசா பகுதியில் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
ஜெருசேலமில் பாலஸ்தீனர்களின் உரிமைகளையும் அவா்களின் புனித தளங்களையும் பாதுகாக்கும் வகையில் எங்கள் போராட்டம் தொடரும். இதற்கான எத்தகைய எதிர்வினைகளையும் துணிச்சலுடன் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம் என ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் ருவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையில் காசாவில் இருந்து ஏவப்பட்ட வெடிமருந்துகள் நிரப்பிய பலூன்களால் இஸ்ரேலில் 20 இடங்களில் தீப்பரவல் ஏற்பட்டதாக இஸ்ரேலிய தீயணைப்பு சேவைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலில் 12 வருடங்களாக நீடித்த பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து புதிய கூட்டணி அரசாங்கம் அண்மையில் ஆட்சியமைத்துள்ளது.
இஸ்ரேல் பிரதமராக நப்தாலி பென்னட் பதவியேற்று சில நாட்களே ஆகும் நிலையில் பாலஸ்தீனம் மீது மிகப் பெரிய தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கு ஜெருசலேமில் அதிகரித்துவந்த பதட்டங்களுக்குப் பின்னர் கடந்த மே 10 காசாவில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனிய போராளிகளுக்கும் இடையிலான உக்கிர மோதல் ஆரம்பமானது.
முஸ்லிம்கள் மற்றும் யூதர்களால் புனித தளமான போற்றப்படும் அல்-அக்ஸாவில் கூடியிருந்த பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேலிய பொலிஸார் கொடூர தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து மோதல் வெடித்தது.
அத்துடன், அரேபிய மாவட்டமான ஷேக் ஜர்ராவில் பாரம்பரிய பாலஸ்தீன குடியிருப்பாளர்களை பலவந்தமாக வெளியேற்றி யுதர்களை குடியேற்ற எடுக்கப்பட்ட முயற்சியும் மோதலுக்குக் காரணமாக அமைந்தது.
ஆக்கிரமிப்பு நோக்கில் ஷேக் ஜர்ராவில் கூடிய இஸ்ரேலிய பொலிஸாரை அங்கிருந்து வெளியேற்றுமாறு ஹமாஸ் எச்சரித்தது. அவா்கள் வெளியேற மறுத்ததை அடுத்து ஹமாஸ் போராளிகள் ரொக்கட்டுக்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.
இதனையடுத்து இஸ்ரேல் வான் மற்றும் தரை வழிகள் ஊடாக பால்ஸ்தீனம் – காசா பகுதிகளை நோக்கி உக்கிர தாக்குதல்களை நடத்தியது.
இந்த மோதல்களின்போது இஸ்ரேலை நோக்கி 4,300 க்கும் மேற்பட்ட ரொக்கெட்டுகளை வீசி ஹமாஸ் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்தது. பதிலடியான காசாவில் 1,000 க்கும் மேற்பட்ட ஹமாஸ் இலக்குகளை தாக்கியதாகவும் இஸ்ரேல் தெரிவித்தது.
11 நாட்கள் தொடர்ந்த உக்கிர மோதல்களை நிறுத்த எகிப்து உள்ளிட்ட நாடுகள் மேற்கொண்ட சமரச முயற்சிகளை அடுத்து மே -21 அன்று இரு தரப்பு போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது.
இந்த மோதல்களில் காசாவில் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 243 பேர் கொல்லப்பட்டதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறைந்தது 225 பாலஸ்தீனிய போராளிகளைக் கொன்றதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
இஸ்ரேலில் இரண்டு சிறுவர்கள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டதாக அதன் மருத்துவ சேவை தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.