அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பற்றியெரியும் காட்டுத் தீயால் உலகில் மிகப் பெரிய செக்கோயா மரங்கள் (கலிபோர்னியா செம்மரம்) எரிந்து அழியும் ஆபத்தில் உள்ள நிலையில் அவற்றைக் காப்பாற்றும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
அலுமினியம் தகடுகளை செக்கோயா மரங்களைச் சுற்றி கவசம் போல சுற்றி அவற்றைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது கலிபோர்னியாவின் செக்கோயா தேசியப் பூங்காவில் எரிந்துவரும் காட்டுத் தீ அருகில் உள்ள பெருங் காட்டைத் தாக்கலாம் என அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர். இந்தக்காட்டில் 275 அடி உயரம் கொண்ட ஜெனரல் ஷெர்மன் உள்ளிட்ட சுமார் 2,000 செக்கோயா மரங்கள் உள்ளன.
இந்நிலையில் தீணை அணைக்கும் பணியில் ஹெலிகப்டர்கள், விமானங்கள் ஆகியவற்றின் உதவியுடன் சுமார் 350 வீரர்கள் போராடி வருகின்றனர்.
உலகத்தில் இப்போதிருக்கும் மரங்களில் மிகப்பெரிய மரமாக ஜெனரல் ஷெர்மன் என அழைக்கப்படும் செக்கோயா மரம் கருதப்படுகிறது. இதன் வயது சுமார் 2,700 வருடங்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது மிக முக்கியமான பகுதி. எனவே இந்த தோப்பைப் பாதுகாக்க தீவிரமான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன என செக்கோயா மற்றும் கிங்ஸ் கனியன் தேசிய பூங்கா செய்தித் தொடர்பாளர் ரெபேக்கா பேட்டர்சன் தெரிவித்துள்ளார்.
கலிபோர்னியாவில் இந்தக் கோடையில் 7,400 க்கும் மேற்பட்ட காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 2.2 மில்லியன் ஏக்கருக்கு மேல் காடுகள் எரிந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.