துருக்கியின் தென் பகுதியில் பேரழிவுகளை ஏற்படுத்தி வரும் காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒரு தசாப்தத்தில் பின்னர் துருக்கியை உலுக்கும் மிக மோசமான காட்டுத் தீ பரவலாக இது அமைந்துள்ளது. கடந்த 6 நாட்களாக அங்கு காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது.
துருக்கியில் இதுவரை கிட்டத்தட்ட 100,000 ஹெக்டேர் (250,000 ஏக்கர்) காடுகள் தீயில் கருகி அழிந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
வேகமாகப் பரவி வரும் காட்டுத் தீயால் கடலோர சுற்றுலா மையங்கள் அழிக்கப்பட்டு, அங்கிருந்து சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
130 -க்கு மேற்பட்ட இடங்களில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருவதாக துருக்கி அதிகாரிகள் நேற்று திங்கட்கிழமை தெரிவித்தனர்.
தெற்கு ஐரோப்பா முழுவதும் பலத்த காற்று மற்றும் கடும் வெப்பம் அழிவுகரமான தீப்பரவலைத் தூண்டியுள்ளது. காலநிலை மாற்றமே இதற்கு முக்கிய காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
துருக்கியின் மத்திய தரைக்கடல் மற்றும் ஏஜியன் கடற்கரைகளில் மிக மோசமான தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இவை அந்நாட்டின் முக்கிய சுற்றுலா தளங்களாகும்.
துருக்கியின் தென்மேற்கு நகரங்களான மர்மாரிஸ் மற்றும் கோய்செஜிஸில் விமானங்கள் மற்றும் ஹெலிகப்டர்களில் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்த போராடி வருகின்றனர்.