காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகளுக்கு தடை!

You are currently viewing காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகளுக்கு தடை!

‘மன்னார் ‘சதொச’ மனித எலும்புக்கூடு தொடர்பான வழக்கு விசாரணை, மன்னார் நீதிமன்றத்தில் நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் நேற்று இடம்பெற்றது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பாக மன்றில் முன்னிலையாகிய சட்டத்தரணிகள், குறித்த வழக்கில் முன்னிலையாக முடியாது என்றும் அவர்களுக்கு வழக்காடுவதற்கான உரிமை இல்லை என்ற அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் சார்பான சட்டத்தரணிகள் முன்னிலையாக முடியும் என்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பாக முன்னிலையாகும் சட்டத்தரணிகள் தொடர்ந்தும் ஆஜராக முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

மனித எலும்புக்கூடுகளின் அகழ்வு பணிகளின்போது மண் படைகளுடன் எலும்புகளோடு எடுக்கப்பட்ட பல்வேறு பொருட்கள் இருக்கின்றன. அனைத்துப் பொருட்களும் பொதி செய்யப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. அவற்றை தரம் பிரிக்கும் நடவடிக்கை கடந்த 6ம் மாதம் 26ம் திகதி இடம்பெற்றது.

தரம் பிரித்தலின்போது அதில் உள்ள பொருட்கள் என்ன என்று எங்களினால் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. அந்த பொருட்களும் மீட்கப்பட்ட மனித எலும்புகளின் வயதெல்லையும் ஒத்துப்போக முடியாத நிலை ஏற்படும்போதுதான் எங்களை வெளியேற்ற வேண்டும் என்கின்ற வாதத்தை அரச சட்டத்தரணிகள் மூலம் முன் வைத்துள்ளார்கள். இதனடிப்படையில் இறுதித் தீர்மானமாகவும் கட்டளையாகவும் சொல்லப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பாக, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் சார்பாகவும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாகவும் இதுவரை காலமும் மன்றில் முன்னிலையாகி வந்த சட்டத்தரணிகள் எவரும் மன்றில் முன்னிலையாக முடியாது என்று கூறப்பட்டது.

மனித எலும்புக்கூடுகளின் காலம் பற்றிய இறுதி அறிக்கை உள்ளிட்ட எல்லா அறிக்கைகளையும் ஒட்டு மொத்தமாக வைத்து இறுதி தீர்ப்பாக கொண்டு வர வேண்டும் என்று நீதிமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இடைக்கால அறிக்கை கிடைக்கப் பெற்றுள்ளது. இன்னும் பல அறிக்கைகள் வந்துள்ளது.வர வேண்டியும் உள்ளது. குறிப்பாக பிஸ்கட் பக்கட்டின் அறிக்கை ஒன்று வந்துள்ளது. அது 1990ம் ஆண்டு காணப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைவிட மண் பரிசோதனை, நாறா பரிசோதனை அறிக்கைகள் உட்பட பல அறிக்கைகள் வர வேண்டி உள்ளது. மீட்கப்பட்ட காசு,தோடு ஆகியவற்றின் அறிக்கையும் வர வேண்டும்.

ஒட்டு மொத்த அறிக்கையின் படிதான் நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பாக மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகளான எங்களினால் முன் வைக்கப்பட்டது. இந்நிலையில் மன்னார் நீதிமன்றத்தில் தாம் ஆஜராக முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது. என்றார்.

பகிர்ந்துகொள்ள