சிறீலங்கா அரச படைகள் மற்றும் அதன் துணை ஆயுதக்குழுக்களின் கூட்டு முயற்சியால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை 15 வருடங்களாக தேடியலைந்து, உண்மையைக் கண்டறிந்து நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வேண்டி நின்ற தாயார் ஒருவர் நோய் காரணமாக வவுனியாவில் சாவடைந்துள்ளார்.
வவுனியாவில் 2100 நாட்கள் கடந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடிக்கண்டறியும் தமிழர் தாயக சங்கத்தின் உறுப்பினராக தீவிர பங்களிப்பு வழங்கி வந்த வவுனியா கல்மடு பூம்புகாரைச் சேர்ந்த இ.வள்ளியம்மா (வயது 78) என்பவரே (புத்திர சோகம் காரணமாக நோய்க்கு ஆளாகியிருந்த நிலையில்) கடந்த 15.12.2022 வியாழக்கிழமை அன்று சாவடைந்துள்ளார்.
இவரது மகன்
இராமச்சந்திரன் செந்தூரன் (பிறப்பு: 1991.02.02) என்பவர் வவுனியா நகருக்கு வழமை போன்று தொழிலுக்கு (தினக்கூலி வேலைக்கு) சென்ற வேளை 2007.05.17 அன்று (கடத்தப்படும் போது வயது 16) கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.
தாயாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதோடு, தாயாருக்கு தமிழர் தாயக சங்கத்தினர் தமது இறுதி வணக்க அஞ்சலிகளையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.