காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி சர்வதேச சமூகத்திடம் நீதி கேட்டு போராடிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழத்தமிழர் உறவினர் அமைப்பின் வடமராட்சிக்கிழக்கு ஒருங்கிணைப்பாளரான அருளானந்தம் மேரி பற்றிமா உயிரிழந்துள்ளார்.
இன்று தினம் அவர் தனது 67 வயதில் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி கிழக்கு தாளையடி வடக்கை சேர்ந்த அருளானந்தம் மேரி பற்றிமாவின் ஒரு மகன் மாவீரர், மற்றொரு மகன் காணாமல் ஆக்கப்படுள்ளார்.
குறித்த மகன் கடந்த 2009 ம் ஆண்டு சிங்கள பேரினவாத அரசபடைகளால் முள்ளிவாக்காலில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்.
இன்றுவரை 13 ஆண்டுகளாக காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடிய தாயார் இன்று தனது மகனை காணமுடியாத நிலையில் உயிரிழந்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டறிய சர்வதேச நீதி விசாரணையை வலியுறுத்தி கடந்த 2012 ம் ஆண்டில் இருந்து இன்றுவரை வட கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதியை வேண்டிய போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தாயார்,தந்தையர்கள் சகோதரர்கள் தங்கள் உறவுகளை காண முடியாமல் வடக்கு,கிழக்கில் மட்டும் இதுவரை சுமார் 322 உறவினர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.