காபூல் விமான நிலைய குண்டுவெடிப்பில் 13 அமெரிக்க படைகள் உட்பட 100 பேர் பலி!

You are currently viewing காபூல் விமான நிலைய குண்டுவெடிப்பில் 13 அமெரிக்க படைகள் உட்பட 100 பேர் பலி!

ஆப்கானிஸ்தான் தலைநகர் – காபூல் விமான நிலைய நுழைவாயிலில் நேற்றிரவு இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில் சிக்கி குறைந்தது 100பேர் பலியாகினர்.

உயிரிழந்தவர்களில் அமெரிக்க படைத்தரப்பைச் சேர்ந்த 13 பேரும் உள்ளடங்குகின்றனர். ஆப்கானியர்கள் குறைந்தது 87 பேர் உயிரிழந்தனர்.

அத்துடன், தாக்குதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 150-ஐக் கடந்து அதிகரித்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதத்துக்குப் பின்னர் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்படுவது இதுவே முதல்முறையாகும். பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்க உளவுத்துறை எச்சரித்து சில மணி நேரங்களில் காபூல் விமான நிலையம் அருகே அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன.

தலிபான்களுடன் செய்து கொண்ட உடன்பாட்டின்படி எதிர்வரும் 31-ஆம் திகதிக்குள் அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து வெளிநாட்டுப் படைகளும் முற்றிலுமாக வெளியேற்றப்பட வேண்டும். இல்லையில் விளைவுகள் விபரீதமாகும் என தலிபான்கள் எச்சரித்துள்ளனர். இதனால் இந்தக் காலக்கெடுவுக்குள் வெளியேறும் நோக்குடன் விமான நிலையம் பரபரப்பாக இயங்கிவந்த நேரத்திலேயே இந்த குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் இடம்பெற்றவேளை, சுமார் 5,000 வரையான ஆப்கானியர்கள் அங்கு கூடியிருந்தனர்.

விமான நிலையத்தின் அப்பி நுழைவு வாயில் அருகே முதல் குண்டு வெடித்தது. சில நிமிடங்களுக்குப் பின்னர் ஆப்கானியரை மீட்பதற்காக பிரிட்டன் அதிகாரிகள் பயன்படுத்திவந்த ஹோட்டலில் மற்றொரு குண்டு வெடித்தது.

இதேவேளை, இந்தத் தாக்குதலை தாங்களே நடத்தியதாக ஐஸ்.எஸ்.ஐ.எஸ்.-கே (ISIS-K) என்ற பயங்கரவாத அமைப்பு உரிமை கோரியுள்ளது.

காபூல் விமான நிலையத்தில் தற்போது 5,800 அமெரிக்க படையினரும் சுமார் 1000 பிரிட்டன் படையினரும் உள்ளனர்.

இதுவரை ஆப்கானிஸ்தானில் இருந்து 104,000 பொதுமக்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதில் 66,000 பேர் அமெரிக்கா மூலமாகவும் மேலும் 37,000 பேர் அமெரிக்காவின் நட்பு நாடுகள் மூலமாகவும் காபூலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply