இந்துக்களால் அனுஷ்டிக்கப்படும் கார்த்திகை தீபத் திருநாளான நேற்று முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் இந்த திருநாளை தீபம் ஏற்றி கொண்டாடிய வேளை, மாவட்டத்தின் சில இடங்களில் இராணுவத்தினர் இந்த கார்த்திகை தீபத்திருநாளை குழப்பும் வகையில் செயற்பட்டுள்ளனர்.
செல்வம் பெருக துன்பம் அகல வாழ்வு சிறக்க வேண்டி இந்துக்கள் வீடுகளின் முன்பாகவும் , தமது தொழில் நிலையங்கள், தோட்ட நிலங்கள் போன்றவற்றில் தீபம் ஏற்றி கார்த்திகைத் தீபத்திருநாளை அனுஷ்டிப்பது வழமை.
வழக்கம் போன்றே நேற்று இரவு 06 மணிமுதல் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் இவ்வாறு வாழைக்குற்றிகளை வீட்டின் முன்பாக நாட்டி அதில் சுடர் ஏற்றி கார்த்திகை திருநாளை கொண்டாடிய நிலையில் குழப்பமடைந்த இராணுவத்தினர் மற்றும் இராணுவ புலனாய்வாளர்கள் தீபம் ஏற்றிய சில வீடுகளுக்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளதோடு அச்சுறுத்தும் விதமாக செயற்பட்டுள்ளதாகவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.