அரசியலமைப்பினால் உறுதி செய்யப்பட்ட மக்களின் உரிமைகளை மீறும் வகையில், கோட்டா கோ கம, மைனா கோகம அமைதி போராட்டத்தில் அத்துமீறி தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அவரது புதல்வர் நாமல் ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஸ்டன், ரோஹித்த, பவித்ரா, சனத் உள்ளிட்ட 20 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, தன்னையே முறைப்பாட்டாளராக பெயரிட்டு கோட்டை நீதிவான் நீதிமன்றில் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
குற்றவியல் நடைமுறை சட்டக் கோவையின் 136 (1) ( அ) அத்தியாயத்தின் கீழ் தனிப்பட்ட மனுவாக ( private plaint) அதனை அவர் இவ்வாறு தாக்கல் செய்துள்ளார்.
குறித்த வழக்கின் பிரகாரம், இவ்வழக்கின் சந்தேக நபர்களாக ஜோன்ஸ்டன் பெர்னாடோ,சமத் நிஷாந்த, சமன்லால் பெர்னான்டோ, மஹிந்த ராஜபக்ஷ,நாமல் ராஜபக்ஷ,டேன் பிரியசாத்,சுதத் ஹேவா பதிரன, சஞ்ஜீவ எதிரிமான,பவித்ரா வன்னியராட்சி, ரோஹித அபேகுணவர்தன (ரத்தரான்), மஹிந்த காந்தகம,லேகா காந்தகம, சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய,வசந்தா ஹதபான்கொட, சங்கீத் சில்வா, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் சந்திரகுமார, சிரேஷ்ட பொலிஷ் அத்தியட்சர் நிஷாந்த சந்திரசேகர,பொலிஸ் பொறுப்பதிகாரி சாகர லியககே, பொலிஸ் பொறுப்பதிகாரி குணரத்ன, ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
அத்துடன் சட்டவிரோத கூட்டமொன்றில் உறுப்பினராகவிருத்தல்,கலகம் ஏற்படுத்த ஒன்று கூடுதல், கலகத்தை அடக்க முற்பட்ட அரச சேவையாளர் மீது தாக்குதல் நடாத்தியமை அல்லது அவரது கடமைக்கு இடையுறு விளைவித்தமை, கலவரத்தை ஏற்படுத்தும் நோக்குடன் மக்களை கோபப்படுத்தியமை, சட்டவிரோத கூட்டத்திற்காக கூலிக்கமர்த்தப்பட்டவர்களுக்கு தங்குமிடமளித்தமை, காயம் ஏற்படுத்தியமை, ஆபத்தான ஆயுதங்களில் அல்லது முறைமைகள் ஊடாக நபர்களை காயப்படுத்தியமை, வேண்டுமென்றே கடும் காயம் ஏற்படுத்தியமை,இடையூறு விளைவித்தமை, கட்டாயப்படுத்தியமை,பெண்களை கட்டாயப்படுத்தியமை,அனர்த்தம் ஏற்படுத்தியமை, அச்சுறுத்தியமை, அவசரகால சட்ட வர்த்தமானி இலக்கம் 2279,23 மற்றும் 2022.05.06 ஆம் திகதியிலான விதிமுறைகளின் கீழ் குற்றமிழைத்தமை,பொதுச்சொத்து துஸ்பிரயோக சட்டத்தின் கீழான குற்றச்சாட்டு ஆகியன 15 குற்றச்சாட்டுக்களாக வழக்கில் முன்வைக்கப்பட்டுள்ளன.
தண்டனை சட்டக் கோவையின் 140,144,149,150,154,314,315,316,315,332,342,345,409,486, ஆகிய அத்தியாயங்களின் கீழ் இந்த குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.
சி.சி.ரி.வி. காணொளிகள், ஊடகங்களில் வெளியான காணொளிகள் போன்ற 12 சான்றுப் பொருட்களையும், சாட்சியாளர்களின் பட்டியலும் வழக்கில் இணைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான பின்னணியில், அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுடன் தொடர்புபட்டவர்களுக்கு பயணத்தடை விதிக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பொலிஸாருக்குப் பரிந்துரை செய்யுள்ளது.
மக்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்குவதற்கும், அமைதியை நிலைநாட்டுவதற்கும் இவ்விடயத்தில் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம் என்று சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
அலரிமாளிகையிலும் காலிமுகத்திடலிலும் வன்முறைத்தாக்குதல்களில் ஈடுபட்டவர்களைத் தூண்டியவர்கள் மற்றும் சதிசெய்தவர்கள் உள்ளிட்ட அனைவரையும் சட்டத்தின் பிரகாரம் உடனடியாகக் கைதுசெய்யவேண்டும் என்றும், இதன்போது அவர்கள் அரசாங்கத்தில் வகிக்கக்கூடிய பதவிகள் மற்றும் அவர்களது குடும்பத்தொடர்புகள் என்பவற்றின் அடிப்படையில் எவ்வித பாரபட்சமும் காண்பிக்கப்படக்கூடாது என்றும் சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இவ்வாறான நிலையில், நேற்று இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பொலிஸ் மா அதிபர், முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஸ்டன், சனத் நிசாந்த, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 14 பேரை சந்தேக நபர்களாக பெயரிட்டு சட்ட மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளது.
19 விடயங்களை சுட்டிக்காட்டி முன் வைக்கப்பட்டுள்ள அதே முறைப்பாடு கோட்டை பொலிஸ் நிலையத்திலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவிலும் முன் வைக்கப்பட்டுள்ளதுடன், அதன் பிரதிகள் பிரதம நீதியரசர் மற்றும் அனைத்து உயர் நீதிமன்ற நீதியரசர்களுக்கும், பொலிஸ் ஆணைக் குழுவுக்கும் அனுப்பட்டுள்ளது.