காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் மற்றும் இந்நாட்டு மக்களின் கோபத்தை மேற்கு உலக நாடுகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மறை முகமாக செயற்பட்டதுடன், போராட்டத்திற்கான நிதியையும் அவர்களே வழங்கினர். அதற்கான சாட்சியங்கள் எங்களிடம் இருக்கின்றன. தேவையான சந்தர்ப்பத்தில் அவற்றை நாம் வெளியிடுவோம் என இலங்கை கம்மியூனிஸ்ட் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான டியூ குணசேகர தெரிவித்தார்.
ரஷ்யா- உக்ரைன் போர் மற்றும் சீனாவிடம் பெற்றுக்கொண்ட கடன் ஆகியன காரணமாகவே, எமது நாடு இன்று பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் வீழ்ந்துள்ளதாக பலரும் கூறுகின்றனர்.
உண்மையில் இது வேடிக்கையாக உள்ளது. எமது நாடு சீனாவை விடவும், ஜப்பானிடம் அதிக கடன் வாங்கியுள்ளது. இவை அனைத்தையும் விடவும் நாம் உலக வங்கியிடம் 52 வீதமான கடனை பெற்றுள்ளோம்.
எம் மீது பாரிய கடன் சுமையை சுமத்தியது உலக வங்கியே ஆகும். அதன் காரணமாகவே நம்நாடு இன்று பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் வீழ்ந்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தினார்.
1953 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் திகதியன்று அப்போதைய டட்லி சேனாநாயக்கவின் அரசாங்கத்திற்கு எதிராக காலிமுகத்திடலில் மேற்கொள்ளப்பட்ட மாபெரும் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த ஹர்த்தாலின் 69 ஆண்டுகள் பூர்த்தி நிகழ்வு மற்றும் போராட்டத்தின்போது பலியான 9 பேரின் நினைவுகூரும் வைபவம் என்பன கடந்த வெள்ளியன்று (12) கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே டியூ குணசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “1953 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் திகதி காலி முகத்திடலை மையப்படுத்தி நாடு தழுவிய ரீதியில் மாபெரும் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த ஹர்த்தாலில் 9 பேர் வீர மரணம் எய்தினர்.
இந்த மாபெரும் ஹர்த்தாலின் விளைவாக அப்போதைய பிரதமர் டட்லி சேனாநாயக்க பதவி விலகி புதிய பிரதமராக சேர். ஜோன் கொத்தலாவல பதவியேற்றார்.
அன்றைய இந்த ஹர்த்தால் போராட்டமும், இன்று நாடு எதிர்கொண்டுவரும் பொருளாதார நெருக்கடியின் விளைவாகவே முன்னெடுக்கப்பட்டிருந்தது.
1950 களில் கொரிய போரின் விளைவாக உலகளவில் ஏற்பட்ட தாக்கம் இலங்கையை பெரிதும் பாதித்தது. இந்த நெருக்கடிக்குள் இருந்து எமது நாடு மீள்வதற்கு உலக வங்கி நிபந்தனைகளுடனான உதவிகளை வழங்கியது.
இதன்போது, பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பகல் உணவை இல்லாமல் செய்தனர். 25 சதத்துக்கு இருந்த ஒரு படி அரிசி 70 சதத்திற்கு உயர்த்தினர்.
இவ்வாறு சாதாரண மக்கள் மீது பொருளாதார சுமைகளை அதிகரிக்கும் விதமாகவும், பணம் படைத்த வர்க்கத்தினருக்கு சொற்ப வரியையுமே அறவிட்டது. இதனால் கிளர்ந்தெழுந்த இடது சாரி கட்சிகள், தொழிற் சங்கவாதிகள் அரசாங்கத்திற்கு எதிராக மாபொரும் ஹர்த்தாலை முன்னெடுத்தனர்.
இதுபோலவே, இன்றும் மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கி வருவதால், நாடு தழுவிய ரீதியில் ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும் எதிரான போராட்டங்களை முன்னெடுத்து ஜனாதிபதிகாவிருந்த கோட்டாபய ராஜபக்ச, பிரதமராகவிருந்த மஹிந்த ராஜபக்ச ஆகியோரை பதவியிலிருந்து விலகச் செய்தனர்” என்றார். எமது நாட்டின் பொருளாதார கொள்கைகள் மாற்றமடைய வேண்டும். இந்த முறைமையை மாற்றாது நாட்டை முன்னேற்றகரமான பாதைக்கு கொண்டுச் செல்வது கடினமாகும் என அவர் குறிப்பிட்டார்.
“நாட்டில் நிலவும் இந்த பொருளாதார கொள்கையை மாற்றாவிட்டால், மக்களால் புறக்கணிக்கப்படும் நிலைக்கு தள்ளப்படுவீர்கள் என மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச ஆகியோரிடம் கூறியிருந்தேன்.
ஜே.ஆர். ஜயவர்தன காலத்திலிருந்து காணப்பட்டுவரும் தவறான பொருளாதார கொள்கைகளே தற்போது எமது நாடு பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுப்பதற்கு காரணம். இந்த பொருளாதார முறைமை மாற்றியமைக்குமாறு 2019 ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மஹிந்த ராஜபக்சவிடமும் கோட்டாபய ராஜபக்சவிடமும் ஆணித்தனமாக எடுத்துரைத்தேன்.
நீங்கள் இந்த முறைமையை மாற்றாது விட்டால் மக்களால் புறக்கணிக்கப்படும் நிலைக்குத் தள்ளப்படுவீர்கள் என்று அன்று கூறினேன். நான் கூறியதை உதாசீனம் செய்தார்கள். இன்று அவர்களுக்கு மக்களுக்கு செல்வாக்கு இல்லாமல் போயுள்ளதுடன் பதவிகளும் இல்லாமல் போயுள்ளது.
உண்மையில்,இலங்கை பெற்றுள்ள மொத்த கடன் தொகையில் 10 வீதமான கடனை மாத்திரமே சீனாவிடம் பெற்றுள்ளது. ஜப்பானிடம் 13 வீதமான கடனை பெற்றுள்ளது. 52 வீதமான கடனை உலக வங்கியிடமிருந்தே பெற்றுள்ளது. எமது நாடு கடன் சுமையில் இருந்து மீள்வதற்கு பொருளாதார கொள்கை மாற்ற வேண்டியது அவசியம்”என்றார்.