காவற்துறைக்கு தவறான தகவல் கொடுத்த றொம்மன் தலைமை நிர்வாகி; பெற்றோர் விசனம்!

You are currently viewing காவற்துறைக்கு தவறான தகவல் கொடுத்த றொம்மன் தலைமை நிர்வாகி; பெற்றோர் விசனம்!

திகதி: 18.11.2023 குரல்: 05
வணக்கம்!

கடந்த 10.11.23 அன்று, அன்னை பூபதி Rommen வளாகத்தில் நடைபெற்ற பெற்றோர்
கூட்டத்தில், பெற்றோருக்கு எதிராக வளாக நிர்வாகமும், தலைமை நிர்வாகமும் இணைந்து,
தவறான தகவலை கொடுத்து காவல்துறையை வரவழைத்திருந்தமையையும், எனினும்
காவல்துறை தலையிட வேண்டிய முகாந்திரம் எதுவுமில்லாமல் பெற்றோர் கூட்டத்தை
பெற்றோர், முறைப்படி சுமுகமாக நடத்திய காரணத்தினால் காவல்துறை வளாகத்துக்குள்
வராமலேயே திரும்பிச்சென்றிருந்தமையையும் கடந்த செய்தி மடலில் தெளிவாக
விளக்கியிருந்தோம்.
எனினும், Rommen வளாகம் மீண்டுமொருமுறை பெற்றோருக்கெதிராக பொய்த்தகவலை
கொடுத்து காவல்துறையை Rommen வளாகத்துக்கு நேற்று, 17.11.23 வரவழைத்து
வளாகத்துக்கு மீண்டும் இழுக்கு சேர்த்திருக்கிறது.
10.11.23 அன்றைய பெற்றோர் கூட்டத்தில், மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும்
அதிகமான சபையோரின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்ட, Rommen வளாக நிர்வாகத்தின்
மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் அடிப்படையில், புதிய நிர்வாகமொன்றை தெரிவு
செய்வதற்கான ஆண்டுக்கூட்டத்தை கூட்டும்படி கோருவதற்கான பெற்றோர் /
அங்கத்தவரின் ஆதரவை கோருமுகமாக நடப்பாண்டுக்காக தெரிவுசெய்யப்பட்ட பெற்றோர்
குழுவும், பெற்றோரும் இணைந்து Rommen வளாகத்தில் பெற்றோர் / அங்கத்தவர்களிடம்
கையெழுத்துக்களை சேகரித்துக்கொண்டிருந்தனர்.
குறிப்பாக, வளாகத்தின் கல்வி செயற்பாடுகளுக்கு இடையூறில்லாத வகையில்,
வளாகத்துக்கு வெளியே வாகன தரிப்பிடத்தில் நின்ற பெற்றோர் குழு, பிள்ளைகளை
வாகனங்களில் கொண்டுவந்து வளாகத்தில் இறக்கிவிட்டு வீடு திரும்பிய பெற்றோரிடம்
விடயத்தை விளக்கி கையெழுத்துக்களை சேகரித்துக்கொண்டிருந்தனர். பெற்றோரும் தமது
ஆதரவை வழங்குமுகமாக கையெழுத்துக்களை வழங்கி பெற்றோர் குழுவை
ஊக்குவித்தனர். இதை பொறுத்துக்கொள்ள முடியாத வளாக நிர்வாகத்தினர் இதை தடுக்கும்
கபட நோக்குடன், தவறான தகவலொன்றை வழங்கி காவல்துறையை வளாகத்துக்கு
அழைத்திருந்தனர்.
வளாக வாகன தரிப்பிடத்துக்கு வந்த காவல்துறையினர், அங்கு கையெழுத்து
சேகரித்துக்கொண்டிருந்த பெற்றோரிடம், இங்கு சில இளைஞர்கள் சண்டித்தனம் புரிவதாக

 

தமக்கு தகவல் கிடைத்ததால் தாம் வந்திருப்பதாக தெரிவித்து இளைஞர்கள் எங்கே என
பெற்றோரிடம் வினவிய போது, தங்களை பார்த்தால் சண்டித்தனம் செய்யும் இளைஞர்கள்
போல தெரிகிறதாவென காவல்துறையிடம் பெற்றோர் நகைச்சுவையான எதிர்க்கேள்வி
கேட்டபோது சிரித்துக்கொண்ட காவல்துறை, அங்கு அப்படி ஏதும் நடைபெறாதமையை
ஊகித்துக்கொண்டபடி, தமக்கு யார் தகவல் தந்ததென பெற்றோரை கேட்டனர்.
தாங்கள் அவ்வாறான தவறான தகவலெதையும் தரவில்லையென விளக்கிய பெற்றோர்,
வளாக நிர்வாகம் தவறான தகவலை தந்திருக்கலாமென்ற சந்தேகத்துடன், வளாக
நிர்வாகத்தோடு பேசும்படி கூறி, வளாக வரவேற்பு அமைந்திருந்த மாடிக்கு காவல்துறையை
அனுப்பி வைத்ததோடு, காவல்துறையினருடன் பெற்றோரும் வளாக வரவேற்புக்கு
சென்றனர்.
வரவேற்பறையில் வளாக பெறுப்பாளரிடம் காவல்துறை வினவியபோது, வாகன
தரிப்பிடத்திலிருந்து பெற்றோர் வெளியே போக முடியாதபடி தடுக்கப்பட்டதாக சில
பெற்றோர் தமக்கு முறைப்பாடு செய்ததன் அடிப்படையில் வளாக பொறுப்பாளரே
காவல்துறையை அழைத்ததாக வளாக பொறுப்பாளர் தெரிவித்தார். வளாக
பொறுப்பாளருடன் கூடவே நின்ற நிர்வாக உறுப்பினரொருவர், கையெழுத்து சேகரிப்பில்
ஈடுபட்ட பெற்றோர், குழந்தைகளையும் தடுத்து வைத்து இடையூறு செய்ததாக உண்மைக்கு
புறம்பான தகவலை பெற்றோர் குழு முன்னிலையிலேயே காவல் துறைக்கு வழங்கினார்.
எனினும், இவற்றுக்கான ஆதாரங்களெதையும் காவல்துறைக்கு வழங்க இயலாத
நிலையிலிருந்த வளாக பொறுப்பாளர் மற்றும் நிர்வாக உறுப்பினரின் முன்னிலையிலேயே
இதுகுறித்து காவல்துறைக்கு விளக்கமளித்த பெற்றோர் குழு, ஜனநாயக
விதிமுறைகளுக்குட்பட்டு கடந்த 10.11.23 அன்று நடைபெற்ற பெற்றோர் கூட்டத்தில்
நிறைவேற்றப்பட்ட, Rommen வளாக நிர்வாகம் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின்
அடிப்படையில் ஆண்டுக்கூட்டம் கோருவதற்காக, பெற்றோர் / அங்கத்தவர்களிடம்
முறைப்படி ஆதரவு சேகரித்தமையை விளங்கியதோடு, நிர்வாகம் கூறுவதுபோல் யாரையும்
தடுக்கவில்லை எனவும் விளக்கி, வளாகத்தின் பெற்றோர் / அங்கத்தவர்களிடம் வளாகத்தில்
வைத்து ஆதரவு சேகரிப்பது நோர்வே ஜனநாயக நடைமுறையை மீறுவதாக உள்ளதாவென
காவல்துறையிடம் கேள்வியும் எழுப்பினர்.
பெற்றோர் குழுவின் விளக்கத்தை பொறுமையாக கேட்டறிந்த காவல்துறை, வளாக
பெற்றோர் / உறுப்பினர்களிடம் ஆதரவு கோரி வளாகத்தில் வைத்து கையெழுத்து
சேகரிப்பது நோர்வே சட்டத்தின்படி எவ்விதத்திலும் முரணாகாது என்பதை வெளிப்படையாக
தெரிவித்து, பெற்றோரின் நீதிப்போராட்டத்தை அங்கீகரித்திருந்தனர்.

 

வந்த காவல்துறை பெற்றோர் குழுவை கண்டித்து வெளியேற்றும் என ஆவலுடன்
எதிர்பார்த்திருந்த வளாக பொறுப்பாளரும், கூடவே நின்ற நிர்வாக உறுப்பினரும் இதை
சற்றும் எதிர்பார்க்காததால் முகங்கள் வெளிறிப்போனதுடன் பெற்றோர் முன்னிலையிலேயே
மூக்குடைபட்டு, அவமானத்தால் கூனிக்குறுகிப்போயினர். வெந்த புண்ணில் வேல் பாய்ந்த
நிலையிலிருந்த அவர்கள், பெற்றோர் குழு என்ன செய்கிறதென தமக்கு தெரியாதென
காவல்துறைக்கு தெரிவித்த போது, நிர்வாகத்துக்கு மின்னஞ்சல் மூலம் அறிவித்துவிட்டு
பெற்றோர் குழு தமது நடவடிக்கைகளை தொடருவது உசிதமாக இருக்குமென கருத்து
தெரிவித்த காவல்துறை, இரு தரப்பினரும் இணைந்து பேசி சுமுகமான தீர்வுகளை காண
முடியுமெனவும் நிர்வாகத்துக்கு அறிவுரை கூறிவிட்டு அங்கிருந்து அகன்று சென்றனர்.
ஆக, பெற்றோரை கண்டிக்கவென, பொய்த்தகவல் கொடுத்து தம்மால் அழைக்கப்பட்ட
காவல்துறை, தமக்கே அறிவுரை வழங்கி, தமக்கே ஆப்பு வைத்து சென்றமையால்
ஆடிப்போன வளாக பொறுப்பாளரும், நிர்வாக உறுப்பினரும், வளாகத்தில் பெற்றோரல்லாத
யாரும் நிற்க முடியாதென தெரிவித்து தங்கள் இயலாமையைக்கு வடிகால் தேட
முயற்சித்தனர். எனினும், அங்கு வளாகத்தின் பெற்றோர் / அங்கத்தவர்கள் மாத்திரமே
நின்றதால் நிர்வாகம் மேலும் அவமானப்பட்டு நின்றமை பரிதாபத்துக்குரியதாக இருந்தது.
இதில், வளாக பொறுப்பாளர், வளாக பெற்றோர் அல்ல என்பதும், அவருடைய பிள்ளைகள்
யாரும் Rommen வளாகத்தில் பயிலவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பெற்றோரின் முறையான நடவடிக்கைகளை தடுக்க முடியாத நிர்வாகம், தவறான தகவலை
வழங்கி காவல்துறையை வளாகத்துக்குள் அழைத்து வளாகத்துக்கு இழுக்கையும்,
அவமரியாதையையும் உண்டாக்கியிருப்பதாகவும், வளாகத்துக்குள் காவல்துறையின்
காலணிகள் படுமளவுக்கு பொய்த்தகவல்களை காவல்துறைக்கு வழங்கி எதேச்சாதிகாரமாக
நடந்துகொண்ட நிர்வாகத்தினர், தொடர்ந்தும் பொறுப்பில் இருக்க தகுதியற்றவர்கள்
என்பதால் வெகு விரைவில் ஆண்டுக்கூட்டம் கூட்டப்பட்டு, நிர்வாகத்தினர் கலைக்கப்பட்டு
புதிய ஆளுமையான நிர்வாகம் தெரியப்பட வேண்டியது அவசியமெனவும் அங்கிருந்த
பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
வாகன தரிப்பிடத்தில் நின்ற பெற்றோர் குழு பெற்றோரிடம் கையெழுத்துக்களை
சேகரித்தமையை மாடியில் நின்றபடியே அடையாளம் காணப்பட்ட நிர்வாக
உறுப்பினரொருவர் காணொளி பதிவு செய்திருந்தார். இவரே, வளாக பொறுப்பாளருடன்
இணைந்து, குழந்தைகளை பெற்றோர் குழு தடுத்தது வைத்ததென முழுப்பொய்யை
காவல்துறைக்கு கூறியவராவார். அவர் கூறியதுபோல், குழந்தைகள் தடுத்து
வைக்கப்பட்டிருந்தால் அவர் எடுத்த காணொளியில் அது பதியப்படவில்லையா என்பதும்,

 

அவர் எடுத்த காணொளியை காவல்துறையிடம் காட்ட அவர் முன்வராதது ஏனென்பதும்
அவருக்கே வெளிச்சம்.
அவரைப்போலவே, பெற்றோருக்கு முன்னிலையிலேயே காவல்துறைக்கு பொய்யான
தகவல்களை வளாக பொறுப்பாளர் வழங்கியிருந்தமை அங்கு கூடியிருந்த பெற்றோரை
முகம் சுளிக்க வைத்திருந்தது. 10.11.23 பெற்றோர் கூட்டத்தில் முழுக்க முழுக்க ஜனநாயக
விரோத முறையில் நடந்து கொண்டு பெற்றோரை அடக்கியாள முற்பட்ட வளாக
பொறுப்பாளர், அகங்காரமும், அதிகாரபோதையும் தலைக்கேறி, தான் செய்வது என்னவென
உணராமல் பெற்றோருக்கெதிராக காவல்துறையை ஏவிவிடுவதற்கு பகீரதப்பிரயத்தனம்
செய்து மூக்குடைபட்டுள்ளார்.
நாளைய சமுதாயத்தை கட்டியெழுப்ப வேண்டிய, குழந்தைகளுக்கு நல்வழிகாட்டியாகவும்,
முன்மாதிரியாகவும் இருக்க வேண்டிய வளாக பொறுப்பாளர், இவ்வாறான பொய்களை
மட்டுமே கூறக்கூடியவராக இருந்து, குழந்தைகளுக்கு எதை கற்பிக்கப்போகிறாரென
பெற்றோர் பேசிக்கொண்டதை காணக்கூடியதாக இருந்தது.
23.09.23 அன்றைய பெற்றோர் கூட்டத்துக்கு பின்னர், நிர்வாகத்துடனான சந்திப்புக்கு
பெற்றோர் பல தடவைகள் எழுத்து மூலமான வேண்டுகோள்கள் விட்டிருந்தும்
அவையனைத்தையும் இன்றுவரை உதாசீனம் செய்துவரும் நிர்வாகம், இருதரப்பினரும்
கூடிப்பேசி பிரச்சனைகளுக்கான தீர்வினை காணமுடியுமென காவல்துறை கூறிய
அறிவுரையை காதில் வாங்கியிருக்குமா என்பதும், அல்லது வரைமுறைக்குட்பட்ட
பெற்றோர் நடவடிக்கைகளை தடுக்க முற்பட்டு பெற்றோர் மத்தியில் தொடர்
அவமானங்களை சந்திக்கபோகிறதா என்பது, இனிவரும் காலங்களில் நிர்வாகம் எப்படி
பெற்றோரை அணுகப்போகிறது என்பதிலிருந்தே தெரியவரும்.

வாய்மையே வெல்லும்!

காவற்துறைக்கு தவறான தகவல் கொடுத்த றொம்மன் தலைமை நிர்வாகி; பெற்றோர் விசனம்! 1காவற்துறைக்கு தவறான தகவல் கொடுத்த றொம்மன் தலைமை நிர்வாகி; பெற்றோர் விசனம்! 2காவற்துறைக்கு தவறான தகவல் கொடுத்த றொம்மன் தலைமை நிர்வாகி; பெற்றோர் விசனம்! 3

 

பகிர்ந்துகொள்ள

Leave a Reply