இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் அமலுக்கு வந்திருப்பதால் காஸாவில் 470 நாட்களுக்குப் பிறகு மீண்டும் அமைதி திரும்பியுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தப்படி, இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலத்தீன கைதிகள் விடுதலைக்கு ஈடாக, ஒவ்வொரு கட்டமாக ஹமாஸ் தன் வசமுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்கும். விடுவிக்கப்படும் ஒவ்வொரு இஸ்ரேலிய பணயக்கைதிக்கும் 30 பாலத்தீன கைதிகளை இஸ்ரேல் சிறைகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்பது நிபந்தனை.
முதல் கட்டமாக ஹமாஸ் 3 இஸ்ரேல் பணயக் கைதிகளை விடுவித்ததற்கு ஈடாக, 90 பாலத்தீன கைதிகளை விடுவித்திருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
முன்னதாக, இஸ்ரேல் சிறைகளில் காஸாவில் உள்ளூர் நேரப்படி காலை 11:15 மணி முதல் போர்நிறுத்தம் தொடங்கியது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்திருந்தது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி, சிறையில் இருக்கும் பாலத்தீனர்களை விடுவிப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் சிறைகளிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள், மேற்கு கரை மற்றும் ஜெருசலேம் பகுதிகளை சேர்ந்த 69 பெண்கள் மற்றும் 21 பதின்பருவ ஆண்கள் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.
விடுவிக்கப்பட்ட பாலத்தீனர்களை வரவேற்பதற்காக மேற்கு கரையில் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் மக்கள் காத்துக் கொண்டிருந்தனர். அதிகாலை 2 மணிக்கு, பாலத்தீனர்களை கூட்டி வந்த பேருந்து பெய்டியூனியா என்ற நகருக்குள் நுழைந்த போது, அங்கிருந்த மக்கள் சந்தோசத்தில் கூச்சலிட்டனர், தங்கள் கார்களின் ஹார்ன்களை சத்தமாக ஒலித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
போர் நிறுத்தத்தின் முதல் கட்டத்தின் போது, 1900 பாலத்தீனர்களை இஸ்ரேல் விடுவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் ஹமாஸ் 33 இஸ்ரேல் பணய கைதிகளை விடுவிக்கும்.
தற்போது விடுவிக்கப்பட்ட பாலத்தீனர்கள் சமீபமாக கைது செய்யப்பட்டவர்கள் என்றும், வழக்கு நடத்தி குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் இல்லை என்றும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.
ஹமாஸ் விடுவிக்கும் ஓவ்வொரு இஸ்ரேலிய பணய கைதிக்கு ஈடாக 30 பாலத்தீனர்களை இஸ்ரேல் விடுவிக்க வேண்டும் என்று ஹமாஸ் தெரிவித்திருந்தது. அதன் படி, போர் நிறுத்தம் அமலுக்கு வந்த ஞாயிற்றுக்கிழமை மூன்று பணய கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. அதற்கு இணையாக 90 பாலத்தீனர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
விடுவிக்கப்படும் 90 பாலத்தீனர்கள் யார் என்ற விவரம் வழங்கப்பட்டாலும், அவர்கள் எப்போது விடுவிக்கப்படுவார்கள் என்ற நேரம் அறிவிக்கப்படவில்லை. எனவே அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மேற்கு கரையில் உள்ள ஓஃபர் சிறைக்கு வெளியே இரவெல்லாம் காத்துக் கொண்டிருந்தனர். திங்கள்கிழமை அதிகாலையில் அவரக்ள் விடுவிக்கப்பட்டனர்.