கந்தசாமித்துரை வள்ளிநாயகி (கிண்ணியம்மா) அவர்களிற்கு “நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு
தமிழீழ விடுதலைப்பற்றோடு, போராளிகளை அன்புடன் அரவணைத்து ஆதரவளித்த கந்தசாமித்துரை வள்ளிநாயகி (கிண்ணியம்மா) அவர்கள், 01.02.2024 அன்று உடல் நலக்குறைவினால் சாவடைந்தார் என்ற செய்தி எமக்குப் பெருந்துயரினை ஏற்படுத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் ஆழமான பற்றுதலோடு, போராளிகளை அரவணைத்து, உணவளித்து அரணாகக் காத்துநின்றவர். நெருக்கடியான காலங்களிலெல்லாம் தனது குடும்பத்திற்கு வரக்கூடிய ஆபத்துக்களைப் புறந்தள்ளி, ஓர் அன்னையாகப் போராளிகளைப் பாதுகாத்ததோடு, பசியோடுவரும் அத்தனை போராளிகளிற்கும் உணவளித்து, விழுப்புண்ணடைந்து வந்த போராளிகளைப் பராமரித்து, முழுமையாகக் குணமடையும்வரை தனது பிள்ளைகளைப்போல் அவர்களைக் காத்துநின்றவர் கிண்ணியம்மா.
இந்திய இராணுவம் தமிழீழ மண்ணை ஆக்கிரமித்து, குரூரமான முறையில் படுகொலைகளைச் செய்திருந்தது. எமது போராளிகளிற்கு ஆதரவளித்தவர்களையும் அரணாக நின்று காத்தவர்களையும் படுகொலை செய்த மிகநெருக்கடியான அக்காலத்தில், தன்னுயிரைப் பாராது போராளிகளைக் காத்துநின்றவராவார். வடமராட்சி அரசியற்துறைப் பொறுப்பாளர் மேஜர் சலாம் அவர்கள் இவரது வீட்டில் தங்கியிருந்தவேளையில் தேசத்துரோகிகளால் காட்டிக்கொடுக்கப்பட்டு இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தினால் சுற்றிவளைக்கப்பட்டபோது சயனைட் உட்கொண்டு வீரச்சாடைந்தார். அந்தச் சூழமைவிலும் மக்கள் எழுச்சியை ஏற்படுத்தி மேஜர் சலாம் அவர்களின் வித்துடலுக்கான இறுதி நிகழ்வினைச் செய்து விடுதலைப்போரிற்கு வீரமுடன் உரமேற்றிய தாயாவார்.
போராட்டக்காலங்களில்போராளிகளின்தேவைகளையும் நெருக்கடிகளையும் மனச்சோர்வின்றிப் பல போராளிகள்மனவுணர்வைப் புரிந்து, அவர்களின் பொறுப்பாளர்களிற்குத் தெரியப்படுத்தி, விடுதலைப்பயணத்தை வீச்சோடு தொடர உந்துசக்கியாக நின்றவராவார். மாவீரர் ஆகிய தனது இரண்டு பிள்ளைகளின் இலட்சியத்தினைத் தன்னில் வரித்துக்கொண்டு தேசிய விடுதலைக்காகப் பயணித்தவராவார்.
தமிழீழத் தேசியத்தலைவர் மீதும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் மீதும் ஆழமான பற்றுதல் கொண்டு, போராட்டத்தின் ஆரம்ப காலம் தொடக்கம் தன்னை முழுமையாக அர்ப்பணித்து, மிகப்பெரும் பலம் சேர்த்த தமிழீழத்தின் பாசமிகு தாயான எங்கள் கிண்ணியம்மா அவர்களின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களின் துயரில் நாமும் பங்கெடுத்துக்கொள்வதுடன், கிண்ணியம்மா என அழைக்கப்பட்ட கந்தசாமித்துரை வள்ளிநாயகி அவர்களின் விடுதலைப்பற்றிற்காகவும் விடுதலைக்கு ஆற்றிய பணிக்காகவும் “நாட்டுப்பற்றாளர்” என என மதிப்பளிப்பதில் நாம் பெருமையடைகின்றோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.
