மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றும் கிராம அலுவலரான விஜி என அழைக்கப்படும் எஸ்.விஜியேந்திரன் என்பவர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு மர்மமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் இடம் பெற்று வரும் சட்ட விரோத மண் அகழ்வு உள்ளிட்ட சட்ட விரோத செயற்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த நிலையில், இவர் கொலை செய்யப்பட்டுள்ளமை அநீதிகளுக்கு எதிராக, குற்றங்களுக்கெதிராக போராடுகின்ற அரச உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் போன்றோருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தால் மன்னாரில் பரபரப்பு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது, அரச ஊழியர்கள் கொதித்துப்போயுள்ளனர், இந்த குற்றத்துடன் தொடர்புபட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்படவேண்டுமென்ற குரல்கள் எழுந்து வருகின்றன.
கொலை செய்யப்பட்டவர் அரச உத்தியோகத்தர் என்பதால் இலுப்பைக்கடவை காவல்த்துறை தீவிர விசாரணைகளை வேகப்படுத்தி முன்னெடுத்து வருவதாகவும், விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவர்கள் என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த கொலைக்கு நீதிவேண்டி மன்னார் மாவட்டத்தை சேர்ந்த அரசு ஊழியர்கள் போராட்டமொன்றை முன்னெடுக்க பேசிவருவதாகவும், தொடர்ந்து மன்னார் வர்த்தக சங்கம், பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மற்றும் பல சமூக மட்ட அமைப்புக்களின் ஆதரவுகளையும் கோரவுள்ளதாக அறியமுடிகிறது