கிராமி விருதுகள் – 5 விருதுகளை வாங்கி குவித்த இளம் பாடகி!

  • Post author:
You are currently viewing கிராமி விருதுகள் – 5 விருதுகளை வாங்கி குவித்த இளம் பாடகி!

சர்வதேச அளவில் இசைத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் கிராமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 62-வது கிராமி விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெற்றது. 15 முறை கிராமி விருதினை வென்றவரும், அமெரிக்காவை சேர்ந்த பிரபல பெண் இசைக்கலைஞருமான அலிசியா கீஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். விழாவின் தொடக்கத்தில் உலங்குவானூர்தி விபத்தில் உயிரிழந்த கூடைப்பந்தாட்ட வீரர் கோபே பிரயண்ட்டுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

விழாவில் அமெரிக்காவை சேர்ந்த 18 வயதான இளம் பாப் பாடகி பில்லி எல்லிஷ், சிறந்த புதிய இசைக்கலைஞர், இந்த ஆண்டின் சிறந்த பாடல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் விருதுகளை வாங்கி குவித்தார். அவரது மூத்த சகோதரரான பின்னியாஸ் ஓகோனெல் சிறந்த தயாரிப்பாளருக்கான விருதை பெற்றார்.

பில்லி எல்லிசுக்கு அடுத்தபடியாக அமெரிக்க பாடகி லிசோ 3 பிரிவுகளில் கிராமி விருதுகளை வென்றுள்ளார். புகழ்பெற்ற பாடகியான லேடி காகா, காட்சி ஊடகத்தில் (விசுவல் மீடியா) சிறந்த பாடலை எழுதியதற்காக கிராமி விருதை வென்றார். கடந்த ஆண்டும் இதே பிரிவிலும், சிறந்த பாப் இரட்டையர் மற்றும் குழு பாடலுக்கான கிராமி விருதுகளை வென்றவரான லேடி காகா.

பிகமிங் என்ற பெயரில் தனது சுயசரிதையை ஒலிப்புத்தகமாக வெளியிட்ட முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிச்செல்லே ஒபாமாவுக்கு, ‘சிறந்த பேசும் சொல்’ என்ற பிரிவில் கிராமி விருது வழங்கப்பட்டுள்ளது. ஒபாமா இதே பிரிவில் 2 முறை கிராமி விருதுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள