வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 6 ஆண்டுகள் இன்றுடன் நிறைவடையும் நிலையில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, தமது கைகளை கட்டியவாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், தமது உறவுகளின் படங்களையும், கறுப்பு கொடிகளையும் கரங்களில் ஏந்தியிருந்தனர்.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பமான குறித்த ஆர்ப்பாட்டம் பேரணியாக A9 வீதி ஊடாக டிப்போ சந்தி நோக்கி பயணித்தனர். இதன் போது ஓ.எம்.பி அலுவலகம் முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, ஓ.எம்.பி வேண்டாம் என்றும்,வெளியேறுமாறும் கோசங்களை எழுப்பினர்.
தொடர்ந்து, ராஜபக்ச குடும்பங்களை கைது செய்யுமாறும், இராணுவம் வெளியேற வேண்டும் எனவும், அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும், தமது பிள்ளைகள் எங்கே என கேட்டும் கோசங்களை எழுப்பியவாறு குறித்த பேரணி டிப்போ சந்தியை சென்றடைந்து கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட உறவுகள் அழுகையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை அரசிடம் கையளிக்கப்பட்ட உறவுகள் இன்றுவரை எங்கு என்று தெரியவில்லை. இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஆனால் நீதி கிடைக்கவில்லை. ஆனாலும் எமக்கான நீதி கிடைக்கும்வரை நாங்கள் தொடர்ந்தும் போராடுவோம்.
இந்த நிலையில் பொங்கல் கொண்டாடுவதற்கு வடக்கிற்கு வருகின்றனர். 2 லட்சம் நட்டயீடு தருவதாக கூறுகின்றனர். எமக்கு அவை வேண்டாம். அதனை வைத்து எம்மால் ஒன்றும் செய்ய முடியாது.
எமக்கு எமது பிள்ளைகளே வேண்டும். சர்வதேசம் எமது பிள்ளைகளை மீட்டு தர வேண்டும் என அவர்கள் குறிப்பிட்டனர்.
குறித்த போராட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.