கிளிநொச்சியில் உள்ள இரண்டு ஆடைத்தொழிற்சாலைகளில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுப்பரவல் நிலைமைகள் தொடர்பில் மாவட்ட சுகாதார பிரிவினர் மௌனம் காத்து வருகின்றனர் எனவும், உண்மை நிலைமைகளை மூடி மறைக்க முற்படுவதாகவும் பொதுமக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இதனால் மக்கள் மத்தியில் ஒரு வித அச்சமும் ஏற்பட்டுள்ளது.
இவ்விரண்டு ஆடைத்தொழிற்சாலைகளிலும் ஆயிரக்கணக்கான இளைஞர்களும், யுவதிகளும் பணியாற்றுகின்றனர். எனவே இவர்களில் ஏற்படுகின்ற பாதிப்பு மாவட்டத்தின் அனைத்து குக்கிராமங்கள் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பிரதேசங்களையும் பாதிக்கும் எனவும் எனவே இந்த விடயத்தில் சுகாதார பிரிவினர் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதேவேளை மாவட்ட சுகாதார பிரிவின் இளநிலை அதிகாரிகள் கருத்து தெரிவிக்கும் போது ‘ஆடைத்தொழிற்சாலை ஒன்று தங்களுக்கு ஒத்துழைப்பு தருவதாகவும் மற்றையது சுகாதார துறைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்றும் தனிமைப்படுத்தப்பட்ட பணியாளர்களையும் கட்டாயப்படுத்தி பணிக்கு அழைப்பதான முறைப்பாடு தங்களுக்கு கிடைத்துள்ளது’என்றும் தெரிவிக்கின்றனர்.
‘ஆனால் பொறுப்பான சுகாதாரதுறை உயரதிகாரிகள் இவற்றை கண்டுகொள்ளவில்லை’ என்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ‘இதனால் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் ஆடைத்தொழிற்சாலைக் கொரோனா கொத்தணி ஒன்று ஏற்படுமாயின் அதற்கான முழுப் பொறுப்பினையும் குறித்த ஆடைத்தொழிற்சாலைகளது நிர்வாகத்தினரும் மாவட்ட மற்றும் மாகாண சுகாதாரத்துறை உயரதிகாரிகளுமே ஏற்க நேரிடும்’ என இளநிலை சுகாதார அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.